Published : 02 Sep 2017 10:06 AM
Last Updated : 02 Sep 2017 10:06 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - கிரிகோர் டிமிட்ரோவ், குஸ்நெட்சோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 121-ம் நிலை வீரரான ஜப்பானின் டேனியலை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 4-6 என நடால் இழந்தார். எனினும் அடுத்த 3 செட்களையும் 6-3, 6-2, 6-2 எனக் கைப்பற்றினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் நடைபெற்றது. 3-வது சுற்றில் நடால், 59-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயரை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்யாவின் மிகைல் யூஸ்னியை எதிர்கொண்டார். இதற்கு முன்னர் யூஸ்னிக்கு எதிராக 16 ஆட்டங்களில் மோதி அனைத்திலும் பெடரர் வெற்றி பெற்றிருந்ததால் இம்முறை எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெடரருக்கு வெற்றி எளிதாக அமையவில்லை. 5 செட்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் சுமார் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் போராடிய பெடரர் 6-1, 6-7, 4-6, 6-4, 6—2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

36 வயதான பெடரர், முதல் சுற்றிலும் 5 செட்கள் வரை சென்றே வெற்றி பெற்றிருந்தார். அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் 5 செட்கள் விளையாடி 3-வது சுற்றுக்கு பெடரர் செல்வது இதுவே முதன்முறையாகும். 3-வது சுற்றில் பெடரர், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸை எதிர்த்து விளையாட உள்ளார். அவர், தனது 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த பெர்னாண்டடோ வெர்டஸ்கோவை 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

டிமிட்ரோவ் வெளியேற்றம்

7-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், 53-ம் நிலை வீரரான 19 வயதான ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவிடம் 5-7, 6-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதேபோல் 15-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் 6-3, 1-6, 6-7, 2-6 என்ற செட் கணக்கில் 64-ம் நிலை வீரரான உக்ரைனின் அலெக்சாண்ட் டோல்கோபோலோவிடம் தோல்வியடைந்தார்.

மற்ற ஆட்டங்களில் 18-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸ் 6-3, 6-7 (3/7), 6-4, 2-6, 7-5 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் டோனால்டு யங்கையும், 11-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் 6-1, 6-3, 7-6 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் டஸ்டின் பிரவுனையும், 6-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

குஸ்நெட்சோவா தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நிக்கோலே கிப்ஸையும், 27-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூய் ஷாங் 6-0, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ரிசா ஒசாகியையும், 10-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் யுலியா புதின்செவாவையும், 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் இவ்ஜெனியா ரோடினாவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

8-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் சுவெட்லனா குஸ்நெட்சோவா 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் குருமி நராவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ், லத்வியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோ, ரஷ்யாவின் கஸட்கினா, எஸ்டோனியாவின் கனேபி, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நீண்ட நேர ஆட்டம்

62-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செல்பி ரோஜர்ஸ்7-6 (8-6), 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி 25-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கவ்ரிலோவாவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 33 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் மகளிர் பிரிவில் அதிக நேரம் நடைபெற்ற ஆட்டம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா - ஸ்பெயினின் கார்பைன் முகுருசா மோதிய ஆட்டம் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.

சானியா அசத்தல்

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷூய் பெங் ஜோடி, குரோஷியாவின் பெட்ரா மார்டிக், டோனா வெகிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. 2-வது சுற்றில் சானியா ஜோடி, சுலோவேக்கியாவின் ஜனா செப்லோவா, மெக்டலினா ரைபரிகோவா ஜோடியை எதிர்கொள்கிறது.

2-வது சுற்றில் போபண்ணா

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பப்லோ குயவாஸ் ஜோடி, அமெரிக்காவின் பிராட்லி, ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. போபண்ணா ஜோடி 2-வது சுற்றில் இத்தாலியின் சைமோன் போலேலி, பேபியோ போக்னி ஜோடியுடன் மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x