Published : 24 Mar 2023 04:03 PM
Last Updated : 24 Mar 2023 04:03 PM

மறக்குமா நெஞ்சம் | 2011-ல் இதே நாளில் WC காலிறுதியில் ஆஸி.யை காலி செய்த இந்தியா: யுவராஜ் - ரெய்னா அபாரம்

யுவராஜ் மற்றும் ரெய்னா | கோப்புப்படம்

அகமதாபாத்: கடந்த 2011-ல் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதி, இறுதி என கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அந்தப் போட்டி இதே நாளில் (மார்ச் 24) நடைபெற்றது. இந்திய அணியின் வெற்றியில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா என இருவரும் பிரதான பங்கு வகித்தனர். ஆட்டத்தில் அழுத்தம் நிறைந்த நேரத்தில் அபாரமாக பேட் செய்து அசத்தினர். இந்த வெற்றி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஏனெனில் 1999, 2003, 2007 என தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் அந்த அணி களம் கண்டிருந்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது ஆஸி. அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் சதம் விளாசி இருந்தார்.

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. இருந்தும் 37.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. அதன்பின்னர் இணைந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா இணையர் 74 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுதான் இந்திய அணியின் கடைசி பேட்டிங் பார்ட்னர்ஷிப். அதன் பின்னர் களம் காண இருந்த அனைவரும் பவுலர்கள். இதில் யுவராஜ் 57 ரன்கள் எடுத்திருந்தார். ரெய்னா 34 ரன்கள் எடுத்தார். 47.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை இந்தியா எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் மற்றும் கம்பீர் அரைசதம் பதிவு செய்திருந்தனர்.

“இந்திய அணி குழுவாக இணைந்து அபாரமாக விளையாடியது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். அவர்களது பேட்டிங் லைன் அப் அபாரமாக உள்ளது. நிச்சயம் அவர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள்” என பாண்டிங் போட்டிக்கு பிறகு சொல்லி இருந்தார். அது அப்படியே நடந்தது. அரையிறுதியில் பாகிஸ்தான், இறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x