Published : 28 Sep 2017 10:45 AM
Last Updated : 28 Sep 2017 10:45 AM

நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ரூ.16 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

உஸ்பெகிஸ்தானில் நடந்த நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ரூ.16 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2015-ம் ஆண்டு கேரளாவில் நடந்த 35-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தடகளப் போட்டியில் பாலமுருகன், தியாகராஜன், எஸ்.அர்ச்சனா, நீச்சல் போட்டியில் ஐஸ்வர்யா செல்வகுமார், நிவ்யா ராஜா, வாள்வீச்சுப் போட்டியில் எம்.ஜே.தினேஷ், டேக்வாண்டோ போட்டியில் கே.ஷாமினி, எஸ்.நரசிம்மபிரியா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.

அதே போல், துப்பாக்கிச் சுடுதலில் என்.நிவேதா, சந்தியா வின்பெட், கையுந்து பந்து போட்டியில் எஸ்.பிரபாகரன், எ.சபரிராஜன், ஜி.ஆர்.வைஷ்ணவ், வி.ஜான் கிறிஸ்டோபர், எஸ்.கனகராஜ்,எம்.நவீன் ராஜா ஜேக்கப், கூடைப் பந்து போட்டியில் ஐஸ்வர்யா, வி.பவானி மற்றும் பவுலினா ஜோசப் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.79 லட்சம் மற்றும் அவர்களது பயிற்றுனர்கள் 17 பேருக்கு ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் ஊக்கத்தொகை என ரூ.90 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேற்று முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் ரீட்டா ஹரிஷ் தக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீச்சல் போட்டி

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் கடந்த 8 முதல் 16-ம் தேதி வரை, 9 வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், மதுரையைச் சேர்ந்த பி.விக்காஸ், நெல்லையைச் சேர்ந்த வி.லெனார்ட் மற்றும் சென்னையைச் சேர்ந்த சு.தனுஷ் ஆகிய மூவரும் நீச்சல் பிரிவில் பதக்கங்கள் வென்று, நாட்டுக்கும் தமிழகத்துக்கும் உலகளவில் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் உட்பட 38 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், விக்காஸ் 1 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள், லெனார்ட் ஒரு தங்கப்பதக்கம், சு. தனுஷ் ஒரு வெள்ளிப்பதக்கம் என 6 பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

இவர்களை பாராட்டி, பி.விகாசுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம், வி.லெனார்டுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பயிற்சியாளர்கள் ஏ.சரோஜினி தேவிக்கு ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500, ஏ.கர்ணனுக்கு ரூ.60 ஆயிரம், வி.வீரபத்திரனுக்கு ரூ.37 ஆயிரத்து 500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x