Published : 19 Mar 2023 04:32 PM
Last Updated : 19 Mar 2023 04:32 PM

IND vs AUS | டாப் ஆர்டரை சீர்குலைத்த ஸ்டார்க் - 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது.

விசாகப்பட்டினத்தில் சில நாட்களாக மழைபெய்து வருவதால் ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி இருந்து வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்புவரை மழை பெய்ததும் இந்த அச்சத்துக்கு காரணமாக அமைந்தது. ஆனால் மழை வழிவிட ஆட்டம் குறித்த நேரத்தில் தொடங்கியது. ஈரப்பதம் கொண்ட மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருந்தது. ஆனால், டாஸ் அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணி முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் தடுமாறியதுபோல் இன்றும் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டது. ஷுப்மன் கில், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறி ஷாக் கொடுத்தார். கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதும், 13 ரன்களுக்கு அவரும் ஸ்டார்க்கின் வேகபந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதற்கடுத்த பந்தே சூர்யகுமார் யாதவ் பூஜ்யத்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். கடந்த போட்டியில் சிறப்பானதொரு இன்னிங்ஸை விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணிக்கு வெற்றி தேடித்தந்த கே.எல்.ராகுல் இம்முறை 9 ரன்களோடு பெவிலியன் திரும்ப இந்திய அணி ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், ரன் மெஷின் விராட் கோலி களத்தில் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஆசுவாசதத்தைக் கொடுத்தது. அதற்கேற்ப விராட்டும் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்கள் சேகரித்து வந்தார். ஆனால், ஆஸ்திரேலியாவின் இளம் பவுலர் எல்லிஸ் அதற்கும் வேட்டுவைத்தார். அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே விராட் கோலி எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, இதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். அக்சர் படேல் மட்டுமே கடைசிவரை அவுட் ஆகாமல் 29 ரன்கள் சேர்த்தார்.

26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் நால்வர் பூஜ்ஜியத்தில் வெளியேறினர். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கி சரிவுக்கு வித்திட்ட மிட்சல் ஸ்டார்க், ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அவருக்கு பக்கபலமாக ஸீன் அப்பாட் 3 விக்கெட்டுக்களையும், நாதன் எல்லிஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். முதல் போட்டியில் தோற்றதற்கு பழிவாங்கும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் இலக்கை துரத்தவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x