Published : 02 Sep 2017 10:07 AM
Last Updated : 02 Sep 2017 10:07 AM

12 அணிகள் கலந்து கொள்ளும் புச்சிபாபு கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம்: சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 அணிகள் உட்பட 12 அணிகள் கலந்து கொள்ளும் கல்பாத்தி-ஏஜிஎஸ் அனைத்து இந்திய புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, மோகித் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

ரெய்னா, துலீப் டிராபியில் இந்தியா புளூ அணியின் கேப்டனாக தேர்வாகி உள்ளதால், புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் உத்தர பிரதேச அணிக்காக முதல் கட்ட ஆட்டங்களில் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புச்சிபாபு தொடர், அக்டோபர் மாதம் தொடங்க உள்ள ரஞ்சி கோப்பை தொடருக்கு சிறந்த முறையில் மாநில அணிகள் ஆயத்தமாக உதவும் என கருதப்படுகிறது. தொடரில் கலந்து கொண்டுள்ள 12 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் தமிழ்நாடு பிரசிடெண்ட் லெவன், கேரளா, அசாம் அணிகளும் பி பிரிவில் தமிழ்நாடு மாவட்ட லெவன், ஹரியாணா, சவுராஸ்டிரா அணிகளும் சி பிரிவில் டிஎன்சிஏ லெவன், பரோடா, ஹைதராபாத் அணிகளும், டி பிரிவில் மும்பை, உத்தரபிரதேசம், சட்டீஸ்கர் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். வெற்றிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.

அரை இறுதி ஆட்டங்கள் 11 மற்றும் 12-ம் தேதிகளில் முறையே எஸ்எஸ்என் கல்லூரி, எம்ஆர்எப் பச்சையப்பா மைதானங்களில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி 14 மற்றும் 15-ம் தேதிகளில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

முதல் சுற்று ஆட்டங்களில் இன்று டிஎன்சிஏ பிரசிடெண்ட் வெலன் - கேரளா, டிஎன்சிஏ மாவட்ட லெவன் - ஹரியாணா, டிஎன்சிஏ லெவன் - பரோடா, சட்டீஸ்கர் - உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x