Published : 27 Sep 2017 10:12 AM
Last Updated : 27 Sep 2017 10:12 AM

புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி

புரோ கபடி லீக்கில் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 6-வது நிமிடத்தில் குஜராத் அணி 6-5 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் அச்சுறுத்தல் இல்லாத தடுப்பாட்டத்தாலும் சச்சின், சுகேஷ் ஹெக்டே ஆகியோரது அபாரமான ரைடுகளாலும் குஜராத் சீராக புள்ளிகள் சேர்க்க தொடங்கியது.

இதன் விளைவாக 12-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் அணி 13-6 என சற்று வலுவான முன்னிலைக்குச் சென்றது. அந்த அணியின் சச்சின் அடுத்தடுத்த ரைடில் புள்ளிகள் சேர்க்க முதல் பாதி ஆட்டத்தில் குஜராத் 20-13 என முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்திலும் குஜராத்தின் கை ஓங்கியது. 26-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியை மீண்டும் ஆல்அவுட் ஆக்கி 27-18 என வலுவான நிலையை அடைந்தது. தமிழ் தலைவாஸ் அணி அவ்வப்போது புள்ளிகள் சேர்த்த போதிலும் கடைசி 4 நிமிடங்கள் இருந்த நிலையில் குஜராத் அணி 34-24 என முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.

இந்த சூழ்நிலையில் பிரபஞ்ஜன், அஜய் தாக்குர் ரைடில் அசத்த குஜராத் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழ் தலைவாஸ் 34-31 என நெருங்கியது. 30 விநாடிகளுக்கும் குறைவாக இருந்த நிலையில் தமிழ் தலைவாஸ் 34-33 என அருகில் நெருங்கியது. இந்த சூழ்நிலையில் ரைடு சென்ற அஜய் தாக்குர் 2 பேரை ஆட்டமிழக்க செய்ய தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 4-வது வெற்றியை பதிவு செய்தது. அஜய் தாக்குர் 13 புள்ளிகள் குவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x