Published : 06 Mar 2023 10:04 AM
Last Updated : 06 Mar 2023 10:04 AM
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் (டபிள்யூபிஎல்) லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
டபிள்யூபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை அபாரமாக வென்றது. இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
முதலில் விளையாடிய டெல்லி மகளிர் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களைக் குவித்தது. டெல்லி அணியின் கேப்டனான மெக் லேனிங் 43 பந்துகளில் 72 ரன்களை அதிரடியாகக் குவித்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 45 பந்துகளில் 84 ரன்களை விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
மரிஜான் காப் 39 ரன்களும், ரோட்ரிக்ஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் ஹீத்தர் நைட் 2 விக்கெட்களைச் சாய்த்தார்.
பின்னர் 224 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி சார்பில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். எலிஸ் பெர்ரி 31, ஹீத்தர் நைட் 34, மேகன் ஷுட் 30 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சோபிக்காததால் பெங்களூரு அணி தோல்வி கண்டது.
டெல்லி அணி தரப்பில் தாரா நோரிஸ் அபாரமாக பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்தார். அலிஸ் கேப்சி 2 விக்கெட்களையும், ஷிகா பாண்டே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தாரா நோரிஸ் ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT