Published : 04 Sep 2017 10:31 AM
Last Updated : 04 Sep 2017 10:31 AM

அமெரிக்க ஓபனில் பெடரர், நடால் முன்னேற்றம்: சானியா, போபண்ணா ஜோடிகள் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரரான பெலிசியானோ லோபஸை எதிர்த்து ஆடினார். அமெரிக்க ஓபனின் முதல் 2 சுற்றுகளிலும் 5 செட்களை வரை போராடி வெற்றிபெற்ற பெடரர், இப்போட்டியில் 6-3, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். கிரண்ட் ஸ்லாம் போட்டியில் பெடரர் பெறும் 325-வது வெற்றியாகும் இது. 4-வது சுற்றுப் போட்டியில் அவர், ஜெர்மனி வீரரான பிலிப் கோல்கிரைபரை எதிர்த்து ஆடவுள்ளார்.

ஆண்களுக்கான 3-வது சுற்றுப் போட்டியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரபேல் நடால் 6-7, 6-3, 6-1, 6-4 என்ற செட்கணக்கில் அர்ஜென்டின வீரரான லியனார்டோ மேயரை வென்றார். அடுத்த சுற்றில் அவர் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கொபோலோவை எதிர்த்து ஆடுவார். நடால், பெடரர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றால் அரை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான பிரிவில் நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிளிஸ்கோவா, சீனாவின் சாங் ஷுவாயை 3-6, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் போராடி வென்றார். அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினா, அமெரிக்காவின் மாடிசன் கீஸ் ஆகியோரும் 4-வது சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போபண்ணா, சானியா வெற்றி

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று போட்டியில் சானியா மிர்சா - பெங் ஷுவாய் ஜோடி ஸ்லொவேக்கியாவின் ஜானா கபெலோவா - மாக்தலீனா ரிபாரிகோவா ஜோடியை 6-7, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆண்களுக்கான முதல் சுற்று இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் விக்டர் டிராய்கி - ஜான்கோ டிப்சரேவிக் ஜோடியை வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ரோஹன் போபண்ணா - டப்ரோஸ்கி ஜோடி, 6-4, 4-6, 13-11 என்ற செட்கணக்கில் ஹீதர் வாட்சன் ஹென்ரி காண்டினென் ஜோடியை போராடி வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x