Published : 04 Mar 2023 05:59 AM
Last Updated : 04 Mar 2023 05:59 AM

3-வது டெஸ்டில் தோல்வி ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஒவ்வொரு முறையும் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது ஆடுகளம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இது தேவை இல்லை என்றே நினைக்கிறேன். முன்னாள் வீரர்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடி இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நான் ஏற்கெனவே கூறியது போன்று இந்த வகையிலான ஆடுகளங்களிலேயே நாங்கள் விளையாட விரும்புகிறோம்.

சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதும் நமது பலத்துக்கு தகுந்தபடிதான் செயல்பட வேண்டும். எங்களது பலமே சுழற்பந்து வீச்சு மற்றும் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதுதான். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் போது மற்ற அணிகள் சொந்த மண்ணின் சாதகத்தை பயன்படுத்துகின்றன. அதில் என்ன தவறு இருக்கிறது. இந்தூர் போட்டியில் நாங்கள் விரும்பியவாறு இரு இன்னிங்ஸிலும் செயல்படவில்லை. நாங்கள் மோசமாக விளையாடியே விக்கெட்களை இழந்தோம். ஒன்று அல்லது இரண்டு விக்கெட்களுக்குதான் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது. மற்றவை எல்லாம் பந்து வீச்சாளர்களின் திறனால் வீழ்த்தப்பட்ட விக்கெட்கள்தான்.

முடிந்தவரை நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டும். பந்து வீச்சாளர் ஒரே இடத்தில் ஆறு பந்துகளை வீச பேட்ஸ்மேன்கள் இடம் கொடுக்கக்கூடாது. வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும். இரண்டு இன்னிங்ஸிலும் நாங்கள் இவற்றை செய்யவில்லை. புஜாரா, ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே தங்களது பாணியில் ரன்கள் குவிக்கும் வழிகளை கண்டறிய வேண்டும். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x