Published : 25 Feb 2023 06:30 AM
Last Updated : 25 Feb 2023 06:30 AM

டி20 உலகக் கோப்பை | இப்படி தோற்றிருக்கக்கூடாது... - ஹர்மன்ப்ரீத் கவுர் வேதனை

கேப்டவுன்: மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கேப்டவுன் நகரில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

173 ரன்கள் இலக்கை துரத்திய அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது தவித்தது. ஷபாலி வர்மா 9, ஸ்மிருதி மந்தனா 2, யாஷ்டிகா பாட்டியா 4 ரன்களில்நடையை கட்டினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 41 ரன்களில் 69 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில், 43 ரன்கள் எடுத்த நிலையில் பிரவுன் பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். 2-வது ரன்னுக்காக ஹர்மன்ப்ரீத் கவுர் ஓடிய போது மட்டை தரையோடு தட்டியதால் அவரால், கிரீஸை தொட முடியாமல் போனது.

இதனால் விரக்தியடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர், மைதானத்திலேயே தனது மட்டையை கோபத்துடன் கீழே எறிந்தார். பிறகு ஓய்வறைக்குத் திரும்பும் வழியில் தனது மட்டையை படிக்கட்டில் மீண்டும் ஓங்கி அடித்தார். இந்த ரன் அவுட் ஆட்டத்தின் சூழ்நிலையை தலைகீழாக மாற்றியது. தேவை இல்லாத நேரத்தில் நிகழ்ந்த ரன் அவுட் ஆனது இந்திய அணி வீராங்கனைகளின் இதயங்களை நொறுக்கியது.

ஏனெனில் அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 32 பந்துகளில் 40 ரன்களே தேவையாக இருந்தது. 16-வது ஓவரில் ரிச்சா கோஷ் (14) ஆட்டமிழந்தார். இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக திகழும் தீப்தி சர்மா கடைசிவரை களத்தில் நின்ற போதிலும்அவரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. 17 பந்துகளை எதிர்கொண்ட அவர், 20 ரன்களே சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய சினே ராணா 10 பந்தில் 11 ரன் சேர்த்து வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் இந்திய அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணி தோல்வியடைந்த பிறகு கண்ணீர் விட்டார் ஹர்மன்ப்ரீத் கவுர். அவருக்கு சக வீராங்கனைகள் ஆறுதல் கூறினர். எனினும் ஹர்மன்ப்ரீத் கவுர் சற்றுமெத்தனமாக செயல்பட்டு ரன்அவுட் ஆனது போன்றே தெரிந்தது.ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட அவர், ஆட்டமிழந்த விதம் ஏதோ தெருமுனையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நிகழ்வது போன்று இருந்தது.

ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த பின்னர் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் அதற்கான முனைப்புடன் மற்ற வீராங்கனைகள் செயல்படவில்லை. இதனால் ஐசிசி தொடரில்கோப்பை வெல்லும் இந்திய மகளிர் அணியின் கனவு மீண்டும் ஒரு முறை கானல் நீராகி உள்ளது.

ஏனெனில் பெரிய அளவிலான தொடர்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முக்கியமான கட்டங்களில் தோல்வியை சந்திப்பது தொடர் கதையாக உள்ளது. 2017-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் நூலிழையில் வெற்றியை தவறவிட்டது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. கடந்த ஆண்டு காமன்வெல்த்விளையாட்டில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 2-வது இடத்தையே பிடித்தது.

டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பின்னர் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியதாவது: நான் ரன் அவுட் முறையில் ஆட்டம்இழந்த உடனே போட்டி ஆஸ்திரேலிய அணியின் வசம் சென்றுவிட்டது. இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன்.

இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது, ஏனெனில் நாங்கள் இதுபோன்று தோற்று இருக்கக்கூடாது. கடைசி வரை நெருக்கமாக ஆட்டம் வந்த நிலையில் நாங்கள் கூடுதல் பொறுப்புடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் விளையாடி இருக்க வேண்டும்.

நான் ரன் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் களத்தில் இருந்தனர். ரிச்சா கோஷ் எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். இதனால் அவர்கள் இருவர் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் வெளியேறிய பின்னர்8 பந்துகளில் ரன்கள் சேர்க்கப்படவில்லை. இதுதான் போட்டியின் சூழ்நிலையை மாற்றியது.

இவ்வாறு ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x