Published : 07 May 2017 10:50 AM
Last Updated : 07 May 2017 10:50 AM

ஹாட்ரிக் வெற்றி பெறுமா பஞ்சாப் அணி: குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சொந்த மைதானத்தில் கடந்த வாரம் டெல்லி அணிக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, தனது கடைசி ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணியை நேற்று முன்தினம் பந்தாடியிருந்தது.

டெல்லி அணியை 67 ரன்களுக்குள் சுருட்டிய நிலையில், பெங்களூரு அணிக்கு எதிராக 138 ரன்கள் எடுத்த போதிலும் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக் ஷர் படேல் ஆல்ரவுண்டராக அசத்தினார். பேட்டிங்கில் 17 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய அவர், பந்து வீச்சில் 11 ரன்களுக்கு 3 விக்கெட்கள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார்.

இது வரை 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி தலா 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமால் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் அந்த அணி உள்ளது.

மும்பைக்கு எதிராக சதம் அடித்த ஹசிம் ஆம்லா இந்த தொடரில் இதுவரை 316 ரன்கள் சேர்த்துள்ளார். எனினும் கடைசி இரு ஆட்டங்களில் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படவில்லை. மேக்ஸ்வெல், மார்ட்டின் கப்தில், ஷான் மார்ஷ், மனன் வோரா, விருத்திமான் சாஹா, அக் ஷர் படேல் ஆகியோர் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர்.

இந்த விஷயத்தில் அந்த அணி முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. பந்து வீச்சில் கடந்த இரு ஆட்டங்களாக வேகப் பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மோஹித் சர்மா, வருண் ஆரோன் ஆகியோரும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். சுழலில் அக் ஷர் படேல் பலம் சேர்க்கிறார்.

11 ஆட்டத்தில் 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் அந்த அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கக்கூடும்.

கடந்த சீசனில் தகுதி சுற்றுவரை முன்னேறிய குஜராத் அணி இந்த சீசனில் பலவீனமான பந்து வீச்சால் பெரிய அளவில் ரன்குவித்தும் தோல்விகளை சந்தித்து வருகிறது. குஜராத் தனது கடைசி இரு ஆட்டங்களில் மும்பை அணிக்கு எதிராக சூப்பர் ஓவரிலும், டெல்லி அணிக்கு எதிராக ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டத்தாலும் தோல்வியை சந்தித்தது.

காயம் காரணமாக பிரண்டன் மெக்கலம் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார். எனினும் ரெய்னா, தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஆரோன் பின்ச் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் இவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அணிகள் விவரம்:

குஜராத் லயன்ஸ்: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன்வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான்மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ்ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில்சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.இடம்: மொகாலி

நேரம்: இரவு 8

நேரடிஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x