Published : 15 Feb 2023 06:59 AM
Last Updated : 15 Feb 2023 06:59 AM

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் | இந்தியாவின் சுமித் நாகல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் - ராம்குமார், முகுந்த் வெளியேற்றம்

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் கிரேட் பிரிட்டனின் ரியான் பெனிஸ்டனுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியாவின் சுமித் நாகல். படம்: பிடிஐ

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ராம்குமார் ராமநாதன், சசிகுமார் முகுந்த், பிரஜ்னேஷ் குணேஷ்வரன் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 415-ம் நிலை வீரரான இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உலகத் தரவரிசையில் 196-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் டிமிடர் குஸ்மானோவுடன் மோதினார். ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் 3-6,6-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 313-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், 313-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜெ கிளார்க்கை எதிர்த்து விளையாடினார்.

2 மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குணேஷ்வரன் 6-4, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். 402-ம் நிலை வீரரான இந்தியாவின் முகுந்த் சசிகுமார் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் 203-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்லிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 54 நிமிடங்களில் முடிவடைந்தது.

506-ம் நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகல், 147-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ரியான் பெனிஸ்டனை எதிர்த்து விளையாடினார். இதில் சுமித் நாகல் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x