Published : 03 Jan 2023 05:32 AM
Last Updated : 03 Jan 2023 05:32 AM

சாதிக்குமா ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி? - இலங்கையுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்

மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா, இலங்கை அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை சந்திக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது தலா 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணி நிர்வாகம் அதிக முன்னுரிமை வழங்காது என்றே கருதப்படுகிறது.

இருப்பினும் 2024-ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் வலுவான அணியை உருவாக்க இப்போதே இந்திய அணி நிர்வாகம் சில திட்டங்களை தொடங்க இலங்கை அணிக்கு எதிரான தொடர் உதவக்கூடும். இதன் ஒரு கட்டமாகவே நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாமல் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட டி 20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபகாலமாக இந்திய அணியில் உள்ள பிரச்சினை என்பது, அச்சம் இல்லாத வகையில் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்ள தயங்குவதுதான். டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்திறன் குறைந்ததும் இதனால்தான்.

இலங்கைக்கு எதிரான இன்றைய முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கக்கூடும். வான்கடே ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த ஜோடி பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். தற்போது அணியில் தங்களுக்கான இடத்தை பற்றி கவலை கொள்ளாமல் இவர்கள் சுதந்திரமாக செயல்பட வழி கிடைத்துள்ளது. அடுத்த டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற குறைந்தது 18 மாதங்கள் உள்ளன. மேலும் இந்த ஆண்டில் இந்திய அணி குறைந்தது 15, டி 20 ஆட்டங்களில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி நிலையான செயல்திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

ஷுப்மன் கில் சர்வதேச டி20-ல் இன்னும் அறிமுகம் ஆகவில்லை. அவரை 3-வது இடத்தில் களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் சிந்திக்கக்கூடும். 4-வது இடத்தில் ஐசிசி டி 20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது அணிக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கக்கூடும். ஒருவேளை 6-வது பந்து வீச்சாளர் தேவை என கருதும் பட்சத்தில் தீபக் ஹூடாவுக்கும் விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பேட்டிங்கில் நடுவரிசையில் அனுபவத்தை கருத்தில் கொண்டு ராகுல் திரிபாதியைவிட சஞ்சு சாம்சனை களமிறக்குவதையே அணி நிர்வாகம் விரும்பக்கூடும்.

இதேபோல் பந்து வீச்சில் ஷிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோருக்கு தொடக்க ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். ஏனெனில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல், உம்ரன்
மாலிக் ஆகியோர் அணியில் உள்ளனர். பிரதான சுழற்பந்து வீச்சாளராக யுவேந்திர சாஹல் இடம் பெறக்கூடும். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் இடம் பெறுவார். ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணி, இந்திய ஆடுகளங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடும். இலங்கை பிரிமீயர் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட அவிஷ்கா பெர்னாண்டோ, ஷமிகா கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. நடுவரிசையில் பனுகா ராஜபக்ச சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
நேரம்: இரவு 7 மணி

இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல், உம்ரன் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

இலங்கை: தசன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா டி சில்வா, ஷாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, அஷேன் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஷமிகா கருணாரத்னே, லகிரு குமரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷன், கசன் ரஜிதா, சதீரா சமரவிக்ரமா, மகீஷ் தீக்சனா, நூவன் துஷாரா, துனித் வெல்லலகே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x