Published : 28 Dec 2022 06:54 AM
Last Updated : 28 Dec 2022 06:54 AM
மெல்பர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரின் இரட்டை ச தத்தால் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 386 ரன்கள் குவித்தது.
மெல்பர்னில் நடைபெற்று வரும்இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் டேவிட் வார்னர் 32 ரன்களுடனும், மார்னஷ் லபுஷேன் 5 ரன்களுடனும் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
லபுஷேன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், வார்னருடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத் தார். இருவரும் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ரன்கள் சேர்த்தனர். வார்னர் 144 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் தனது 25-வது சதத்தை விளாசினார். 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு அவர், அடித்த முதல் சதமாக இது அமைந்தது.
மறுமுனையில் தனது 37-வது அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித்161 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள்சேர்த்த நிலையில் அன்ரிட்ஜ் நார்ட்ஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஜோடி 239 ரன்கள் குவித்து அசத்தியது.
சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 254 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் டேவிட் வார்னர்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் நிகழ்த்தி இருந்தார். 200 ரன்கள் விளாசிய நிலையில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் டேவிட் வார்னர் வெளியேறினார்.
கேமரூன் கிரீன் காயம்: இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் 6 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நார்ட்ஜ் வீசிய பந்தில் வலது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்து வெளியேறினார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 91 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது.
அலெக்ஸ் காரே 9, டிரேவிஸ்ஹெட் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணிகைவசம் 7 விக்கெட்கள் இருக்க இன்று3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT