Published : 25 Dec 2022 12:01 PM
Last Updated : 25 Dec 2022 12:01 PM

அஸ்வின், ஷ்ரேயாஸ் அசத்தல்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனைத் தொடந்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 7 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அக்சர் படேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்தது. அக்சர் பட்டேல் 26 ரன்னிலும், உனாத்கட் 3 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்க அக்சர் பட்டேல் 34 ரன்களிலும், உனாத்கட் 13 ரன்களிலும், பண்ட் 9 ரன்களிலும் வெளியேறினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். வங்கதேசம் தரப்பில் மெகதி ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x