Published : 11 Oct 2022 06:07 AM
Last Updated : 11 Oct 2022 06:07 AM

ஃபிபா யு 17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இந்தியா - அமெரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

புவனேஷ்வர்

16 அணிகள் கலந்து கொண்டுள்ள ஃபிபா யு 17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் கோவா, நவி மும்பை ஆகிய பகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

போட்டியை நடத்தும் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் அணிகளும் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் 21 மற்றும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அரை இறுதி ஆட்டங்கள் 26-ம் தேதியும் இறுதிப் போட்டி 30-ம் தேதியும் நடத்தப்பட உள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ளதால் இந்திய அணி நேரடியாக இந்தத் தொடரில் விளையாட தகுதி பெற்றது. ஃபிபா யு 17 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது இதுவேமுதன்முறை. இந்திய அணியைக் காட்டிலும் அமெரிக்க அணி வலுவானதாக திகழ்கிறது. வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் சங்க கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற கையுடன் ஃபிபா உலகக் கோப்பையில் களமிறங்குகிறது அமெரிக்க அணி. இந்தத் தொடரில் அமெரிக்க அணி 58 கோல்களை அடித்திருந்தது. அதேவேளையில் அந்த அணிக்கு எதிராக ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அமெரிக்க அணி, இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும். அமெரிக்க அணி 5-வது முறையாக யு 17 உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 2008-ம் ஆண்டுதொடரில் மட்டும் 2-வது இடம் பிடித்திருந்தது. மற்ற 3 தொடர்களிலும் அந்த அணி லீக் சுற்றை கடந்தது இல்லை. அதேவேளையில் யு 17 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி உள்ளது.

இத்தாலி, நார்வே, ஸ்பெயின் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றது. இருப்பினும் வலுவான யூரோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் பட்டம்வென்ற இந்திய யு 18 அணியில் விளையாடிய பெரும்பாலான வீராங்கனைகள் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளது பலமாக கருதப்படுகிறது.

லிண்டா கோம் செர்டோ, அனிதா குமாரி, நிது லிண்டா, ஷில்கி தேவி உள்ளிட்டோர் பலம்சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இந்திய அணியின் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி கூறும்போது, “எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெறக்கூடிய அணியாக அமெரிக்கா திகழ்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கால்பந்து போட்டி ஆடுகளத்தில் 90 முதல் 95 நிமிடங்கள் வரை விளையாடப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக புள்ளிகளைப் பெற எங்களுக்கும் வாய்ப்பு இருப்பதாக உணர்கிறோம்" என்றார்.

இந்திய அணியின் கேப்டன் அஸ்தம் ஓரான் கூறும்போது, “பிப்ரவரியில் இருந்தே நாங்கள் இந்த தொடருக்கு சிறந்த முறையில் தயாராகினோம். அணியில் உள்ள அனைவரும் தொடரை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளோம். காலிறுதியை எட்டுவது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்” என்றார்.

இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பிரேசில் – மொராக்கோ, சிலி – நியூஸிலாந்து, ஜெர்மனி – நைஜீரியா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x