Published : 16 Aug 2022 04:29 PM
Last Updated : 16 Aug 2022 04:29 PM

அயர்லாந்து கிரிக்கெட் லெஜெண்ட் கெவின் ஓ’பிரையன் ஓய்வு அறிவிப்பு

டப்லின்: சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் லெஜெண்ட் என அறியப்படும் கெவின் ஓ’பிரையன் அறிவித்துள்ளார். ஆல்-ரவுண்டரான அவர் அயர்லாந்து கிரிக்கெட் வளர்ச்சியில் பங்காற்றிய முக்கிய வீரராக அறியப்படுகிறார்.

கடந்த 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இவர் அறிமுக வீரராக களம் இறங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அசோசியேட் உறுப்பினராக இருந்த அயர்லாந்து அணி கடந்த 2017 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற அந்தஸ்தை பெற்றது. அந்த வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் உள்ளார். கடந்த 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் சதம் பதிவு செய்திருந்தார் கெவின். அது இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட அதிவேக சதமாக ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 50 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அதோடு அந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

அயர்லாந்து அணிக்காக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராகவும் உள்ளார். 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேனும் கெவின்தான். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசிய அயர்லாந்து வீரர் என்ற சாதனையை வைத்துள்ளவர்.

“எனது 16 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் ஓய்வு பெறலாம் என நம்பிக்கை கொண்டிருந்தேன். இருந்தும் கடந்த ஓராண்டு காலமாக நான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அணி நிர்வாகம் வேறு திட்டம் வைத்துள்ளதாக தெரிகிறது.

நாட்டுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து விளையாடினேன். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என தனது ஓய்வு அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x