Published : 21 Jun 2014 02:30 PM
Last Updated : 21 Jun 2014 02:30 PM

அடுத்த சுற்றில் கோஸ்டா ரிகா, இத்தாலி அதிர்ச்சித் தோல்வி; இங்கிலாந்து வெளியேற்றம்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியை கோஸ்டா ரிகா 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் இங்கிலாந்து உலகக் கோப்பை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

கோஸ்டா ரிகா அணியின் பிரையன் ரூய்ஸ் 44வது நிமிடத்தில் அடித்த கனவு கோலே பிறகு வெற்றிக்கான கோலாகவும் மாறியது. இத்தாலி வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்துக்கு ஒரு புற வாய்ப்பு இருந்தது.

இப்போது இத்தாலி, உருகுவே மோதும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

முதல் போட்டியில் இத்தாலி இங்கிலாந்தை வீழ்த்த, உருகுவேயை 3-1 என்று அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது கோஸ்டா ரிகா. இவ்வளவு ஆண்டுகளாக கால்பந்தை உயிர்மூச்சாகக் கருதி ஆடி வரும் இங்கிலாந்து வெளியேற, 4வது உலகக் கோப்பையில் ஆடிவரும் கோஸ்டா ரிகா இரண்டாவது முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.

முதல் பாதியில் அன்று இங்கிலாந்தின் கனவைத் தகர்த்த இத்தாலி ஸ்ட்ரைக்கர் பாலோடெல்லி கோஸ்டா ரிகா அணிக்கு எதிராக ஒரு கோல் வாய்ப்பைத் தவற விட்டா.ர் இந்த ஒரு மூவைத் தவிர இத்தாலி சொல்லிக் கொள்ளும்படியான எந்த வித மூவையும் செய்துவிடவில்லை.

32வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ஆண்ட்ரியே பிர்லோ கொடுத்த பந்தை பாலோடெல்லி கோலாக மாற்றியிருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு விதமாக மாறியிருக்கும். மேலும் கோஸ்டா ரிகாவுக்கு முதல் பாதியில் கிடைக்க வேண்டிய கட்டாய பெனால்டி சிலி நடுவரால் மறுக்கப்படுகிறது. இது நிச்சயம் பெனால்டி கொடுக்கப்படவேண்டிய முறை தவறிய தடுப்பாட்ட உத்திதான் என்பது தெரியவந்தது.

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் ஜூனியர் டையஸ் இடது பக்கத்திலிருந்து ஒரு ஷாட்டை அடிக்க சியெலினி மற்றும் மத்தியோ டார்மியன் இடையே புகுந்தார் கோஸ்டா ரிகா ஸ்ட்ரைக்கர் ரூயிஸ் தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார். கோல் லைன் தொழில் நுட்பம் இது கோல்தான் என்று உறுதி செய்தது.

ஒவ்வொரு முறை அபாய இத்தாலி வீரர் பாலோடெல்லியிடம் பந்து செல்லும்போதும் கோஸ்டா ரிகா டிஃபெண்டர் கியான்கேரியோ கொன்சாலேஸ் அவரை தடுத்து நிறுத்தினார். இது பாலோடெல்லிக்கே வெறுப்பை வரவழைத்தது. மேலும் கோஸ்டா ரிகா வீரர் டயஸை முறை தவறி எதிர்கொண்டதற்காக அட்டை வேறு காண்பிக்கப்பட்டார் பாலோடெல்லி. அவரது நாளாக இது அமையவில்லை.

கடைசி விசில் ஊதப்பட்டபோது கோஸ்டா ரிகா கோச், வீரர்கள் ரசிகர்கள் எழுச்சியுற, தங்கள் விரல்கள் வழியே இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x