Published : 26 May 2022 07:16 AM
Last Updated : 26 May 2022 07:16 AM
சென்னை: மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இணையம் வழி நடைபெறும் இத்தொடரின் அரை இறுதியில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து விளையாடினார். முதல் சுற்று டிரா ஆன நிலையில் அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி கண்டார். 3-வது சுற்று டிராவில் முடிய பரபரப்பான 4-வது சுற்றில் அனிஷ் கிரி வெற்றி பெற்றார். இதனால் ஆட்டம் 2-2 என்றானது.
இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க பிளிட்ஸ் டை-பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பிரக்ஞானந்தா 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா.
16 பேர் பங்கேற்ற செசபிள் தொடரில் அனிஷ் கிரி தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த நிலையில், 11-ம் வகுப்பு மாணவனான பிரக்ஞானந்தாவிடம் வீழ்ந்துள்ளார். அரை இறுதி போட்டி முடிந்து உறங்கச் சென்ற பிரக்ஞானந்தா காலையில் பள்ளி இறுதித் தேர்வை எழுதினார்.
இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா, 2-ம் நிலை வீரரான சீனாவின் டிங் லிரனுடன் மோதுகிறார். டிங் லிரன், அரை இறுதியில் உலக சாம்பியனும், முதல் நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். இறுதிப்போட்டி இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT