Published : 24 Mar 2022 04:53 PM
Last Updated : 24 Mar 2022 04:53 PM

IPL 2022 அணி அலசல் | தரமான ஆல் ரவுண்டர்கள், டாப் ஆர்டர் அச்சம் - புதிய பயணத்தில் லக்னோ எப்படி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மற்ற சீசன்களை விட, வரவிருக்கும் சீசன் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருப்பதற்கு புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளதும் காரணம். இரண்டு அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை கே.எல்.ராகுல் வழிநடத்த உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு ஐபிஎல் என்பது புதியது கிடையாது. 2016-ல் சூதாட்ட புகாரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்டபோது இரண்டாண்டுகள் புனே அணியை நிர்வகித்தது அவர்தான். இப்போது நிரந்தமரக ஐபிஎல்லின் ஓர் அங்கமாக மாறும் பொருட்டு லக்னோ அணியை வாங்கியுள்ளார்.

ஏலத்தில் எப்படி செயல்பட்டது? - ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு ரூபாயை கூட மிச்சம் வைக்காமல் வீரர்களை வாங்கி குவித்த அணி என்றால், அது லக்னோ மட்டுமே. அந்த அளவுக்கு மிக துல்லியமாக, தெளிவுடன் வீரர்களை வாங்கியது. ஏலத்துக்கு முன்பாகவே கே.எல்.ராகுலை கேப்டனாக அறிவித்து அவரை ஒப்பந்தம் செய்த லக்னோ நிர்வாகம், அவருடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் இருவரையும் ஒப்பந்தம் செய்தது.

அதேநேரம், ஏலத்தில் கடந்த ஐபிஎல்லில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய பௌலர் ஆவேஷ் கானை ரூ.10 கோடி கொடுத்து வளைத்து அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தது. மேலும், குயிண்டன் டி காக் (ரூ.6.75 கோடி), எவின் லூயிஸ் (ரூ.2 கோடி), மனீஷ் பாண்டே (ரூ.4.60 கோடி), தீபக் ஹூடா (ரூ.5.75 கோடி), ஜேசன் ஹோல்டர் (ரூ.8.75 கோடி), க்ருணல் பாண்டியா (ரூ.8.25 கோடி) கிருஷ்ணப்பா கௌதம் (ரூ.90 லட்சம்), இங்கிலாந்தின் மார்க் உட் (ரூ.7.5 கோடி), அங்கித் ராஜ்புத் (ரூ.50 லட்சம்) என வாங்கியது. இதேபோல் ஷபாஸ் நதீம், மனன் வோரா, கரன் ஷர்மா, ஆயுஷ் பதானி, துஷ்மந்த சமீரா, மயங்க் யாதவ் என இளம் வீரர்களையும் சேர்த்துக்கொண்டது. எந்த வீரருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து முக்கிய வீரர்களை குறிவைத்து ஏலத்தில் செயல்பட்டிருந்தது லக்னோ.

ஆல் ரவுண்ட் அணி: லக்னோ அணியின் சிறப்பம்சமே அதன் ஆல் ரவுண்டர்கள்தான். இப்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டின் திறன்மிகுந்த ஆல் ரவுண்டர்களாக, மேட்ச் வின்னர்களாக அறியப்படுகிற ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவருடன், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், கைல் மேயர்ஸ் என தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர்கள் நிறைந்த அணியாக உள்ளது. இதுவே இந்த அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. கிருஷ்ணப்பா கௌதமை தவிர மற்ற நால்வரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். தீபக் ஹூடா சமீப மாதங்களில் தான் இந்திய அணியில் இடம்பிடித்து தனது திறமையை நிரூபித்தார் என்பதால் பெரும்பாலும் நான்கு ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

பந்துவீச்சும் இந்த அணியின் பலமாக உள்ளது. சூழல் அல்லது வேகப்பந்துவீச்சு என எதுவாக இருந்தாலும் இரண்டிலும் திறமையான வீரர்களை கொண்டுள்ளது. ரவி பிஷ்னோய், ஷாபாஸ் நதீம், க்ருனால் பாண்டியா, கரண் ஷர்மா, கிருஷ்ணப்ப கவுதம் என சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசைக்காட்டினால், ஆண்ட்ரு டை, அங்கித் சிங் ராஜ்பூத், துஷ்மந்த சமீரா, கைல் மேயர்ஸ், மொஹ்சின் கான், மயங்க் யாதவ் என இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை கொடுக்கின்றனர். இவர்களை ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் சீனியர்கள் வீரர்களாக வழிநடத்த உள்ளனர்.

உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள்: கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் யூனிட்டை வழிநடத்த உள்ளார். அவருடன், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, எவின் லூயிஸ் போன்றோர் பலம் சேர்க்கின்றனர். என்றாலும், இந்த பேட்டிங் யூனிட்டே பலவீனமாக உள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஓப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் டி காக் இன்னும் அணியுடன் இணையவில்லை. வங்கதேச தொடரில் விளையாடி வருவதால் அவர் வருகை தாமதமாகிறது. மறுபுறம், மனிஷ் பாண்டே, எவின் லூயிஸ் ஆகியோரை பொறுத்தவரை இருவருமே கடந்த சீசன்களில் நிலைத்தன்மை இல்லாத ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

எவின் லூயிஸ் அதிரடிக்கு பெயர்போனாலும் கன்சிஸ்டன்ஸி என்று வரும்போது அவர் கேள்விக்குரியவராக ஒருவராகவே மாறிவிடுகிறார். லக்னோ அணியின் பேட்டிங் ஒட்டுமொத்தத்தில் டாப் ஆர்டர்களான ராகுல் மற்றும் டி காக் இருவரை நம்பியே உள்ளது. அவர்களை விடுத்தால் ஒட்டுமொத்தமாக ஆல் ரவுண்டர்களையே நம்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். பேக் அப் பேட்ஸ்மேன்களாக அணிகளில் எடுக்கப்பட்டுள்ள இளம்வீரர்கள் மனன் வோஹ்ரா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி எந்த மாதிரியான தாக்கத்தையும் ஏற்படுத்துவார்கள் என்பது புரியாத புதிர். எனவே, டாப் ஆர்டரில் இறங்கும் ராகுல் மற்றும் டி காக் தொடர் முழுவதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல் இன்னொரு அச்சுறுத்தல் வீரர்களின் காயம். தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே ரூ.7.5 கோடிக்கு எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் மார்க் உட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக ஆண்ட்ரு டை எடுக்கப்பட்டுள்ளார். உட் விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இதுபோன்ற வீரர்களின் காயம் லக்னோ அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

ஐபிஎல் தொடரில் தோனி, ரோஹித் சர்மாவுக்கு பிறகு இரண்டு முறை பட்டத்தை வென்ற வீரர் கவுதம் கம்பீர். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்களின் தேர்வு முதல் அணியின் செயல்பாடுகள் வரை அவரின் ஆலோசனைப்படியே நடந்து வருகிறது. அவரின் கோப்பை வென்ற அனுபவத்துடன், கே.எல்.ராகுலின் வழிநடத்தலும், ஆல் ரவுண்டர்களின் ஆட்டமும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை ஐபிஎல் பயணத்தை வெற்றியுடன் துவங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீரர்கள் விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, குயின்டன் டி காக், க்ருனால் பாண்டியா, ஆவேஷ் கான், அங்கித் சிங் ராஜ்பூத், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மனன் வோஹ்ரா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லூயிஸ், மயங்க் யாதவ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x