Published : 23 Mar 2022 07:05 PM
Last Updated : 23 Mar 2022 07:05 PM

IPL 2022 அணி அலசல் | புதிய கேப்டன், பழைய கட்டமைப்பு - ஷ்ரேயாஸ் தலைமையில் உச்சம் தொடுமா கேகேஆர்?

ஐபிஎல் பட்டத்தை இருமுறை வென்றதுடன், கடந்த சீசனின் ரன்னர் அப் அணியாக வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அலைஸ் கேகேஆர். கடந்த ஆண்டு ஐபிஎல்லின் முதல் பாதியில் முதல் ஏழு லீக் ஆட்டங்களில் ஐந்தில் தோல்வி கண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது ஒரு பெரிய எழுச்சியை கண்டது அந்த அணி. வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் புதிய ஸ்டாராக உருவெடுத்த அதேநேரம், சுனில் நரைன் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப இறுதிப்போட்டி வரை சென்றது. முதல் பாதியில் தினேஷ் கார்த்திக் கேகேஆரை வழிநடத்திய நிலையில், இரண்டாம் பாதியில் மோர்கன் வழிநடத்தினார்.

ஆனால், இந்த இருவருமே இப்போது அணியில் இல்லை. இப்போது புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளவர் இந்தியாவின் இளம் நட்சத்திரம் ஷ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் சிறந்த வீரராகவும், டெல்லி அணியின் கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளதால் அவர் மீதான நம்பிக்கை கேகேஆர் நிர்வாகத்திடம் மட்டுமல்ல, அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. கேப்டனாக ஷ்ரேயாஸின் அணுகுமுறை கேகேஆர் அணிக்கு ஒரு புதிய பயணத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏலத்தில் எப்படி? - ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் சுவாரஸ்யமாக தனது ஏலத்தை நடத்தியது. அனுபவமிக்க வீரர்களான தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் போன்றவர்கள் கழட்டிவிட்டதுடன், கேகேஆரின் தூண்களான சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தியை தக்க வைத்தது. ஏலத்தில், 12.25 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயரையும், 1 கோடிக்கு அஜிங்க்யா ரஹானேவையும் வாங்கியது. வெளிநாட்டு வீரர்களில் சாம் பில்லிங்ஸ் 2 கோடி கொடுத்தும், ஏற்கெனவே இதே அணியில் இருந்த கம்மின்ஸ் (7.25 கோடி), நிதிஷ் ராணா (8 கோடி), ஷிவம் மாவி (7.25 கோடி) என சில பழைய வீரர்களை தக்க வைத்து தனது பழைய அணியின் கட்டமைப்பை சிதைக்காமல் பார்த்துக்கொண்டது. இவர்களுடன் அறிமுக வீரர் ஷெல்டன் ஜாக்சன், ரிங்கு சிங், முகமது நபி, அங்குல் ராய், டிம் சவுத்தி, சமிகா கருணாரத்னே, மேஷ யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த இந்திரஜித் என ஜூனியர் + சீனியர் காம்போவில் வீரர்கள் என ஏலத்தில் தனது அனுபவ முதிர்ச்சியை வெளிப்படுத்தியது கேகேஆர்.

பலமான பேட்டிங்: மெகா ஏலத்துக்கு பிறகு, கேகேஆர் பேட்டிங் யூனிட்டில் வலுவாக உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று. வெங்கடேஷ் ஐயர், சுனில் நரேன், ஆரோன் பின்ச், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷ்ரேயாஸ், சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா என ஹிட்டர்கள் நிறைந்த அணியாக பேட்டிங்கில் கெத்து காட்டுகிறது. கடந்த சீசனின் பெர்பாமென்ஸால் வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங்கில் ஒரு ஸ்லாட் இடத்தை தக்கவைத்து கொள்வது உறுதியாகியுள்ளது. அதேநேரம், அவருடன் யார் ஓப்பனிங் செய்ய வைப்பது என்பதுதான் ஷ்ரேயாஸிற்கு காத்திருக்கும் சவால். ஆரோன் ஃபின்ச் அதற்கான வெளிப்படையான சாய்சாக இருந்தாலும், வழக்கம் போல சுனில் நரேனும் வாய்ப்பில் நீடிக்கிறார். இதேபோல் நிதிஷ் ராணாவை சோதனை முயற்சியில் களமிறக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மூன்றாவது ஸ்லாட் ஷ்ரேயாஸ்க்கு. அதன்பிறகு மிடில் ஆர்டரில் கம்மின்ஸ் வரை அந்த அணியின் பேட்டிங் யூனிட் வலுவாக உள்ளது.

என்ன பிரச்சினை? - விக்கெட் கீப்பரில்தான் பிரச்சினை தொடங்குகிறது. விக்கெட் கீப்பிங் பணிக்கு வெளிநாட்டு வீரரான சாம் பில்லிங்ஸை நம்பியிருக்கும் கட்டாயத்தில் கேகேஆர் உள்ளது. அவருக்கு பேக் அப் வீரராக யாரை இடம்பெறச் செய்வது என்பது பிரச்சினைக்கான காரணம். அதேபோல் கடந்த சில சீசன்களாக ஐபிஎல்லில் ஃபின்ச் மற்றும் ரஹானே என இருவரும் வெளிப்படுத்திய பார்ம் பேட்டிங்கில் சில கவலைகளை ஏற்படுத்துகிறது. வேகப்பந்து வீச்சு யூனிட்டை கம்மின்ஸ் வழிநடத்துவார். டிம் சவுத்தி போட்டியின் ஆரம்ப கட்டங்களில் இடம்பெற முடியாதது பிரச்சினையாக இருந்தாலும் ஷிவம் மாவி, உமேஷ் யாதவ் மாற்று வீரர்களாக இடம்பெறலாம்.

ஷிவம் மாவியை பொறுத்தவரை கடந்த சீசனில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் காரணமாக கேகேஆர் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அதேநேரம் உமேஷ் யாதவ் சமீப காலங்களில் ஐபிஎல்லில் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும், ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் ஆல் ரவுண்ட் பெர்பாமர்களாக அனைத்துக்கும் தீர்வாக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேனுடன் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, ஜார்கண்ட் சூழல் மன்னன் அங்குல் ராய் இருவரும் சுழற்பந்துவீச்சை பலப்படுத்துகின்றனர். பெரும்பாலும் மிஸ்டரி ஸ்பின்னர்களாக இருப்பதால் இவர்களின் தாக்கம் இந்த ஐபிஎல்லில் நிறைய இருக்கலாம் என எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் கெளதம் கம்பீர். கம்பீருக்கு பிறகு சரியான கேப்டன் கேகேஆருக்கு அமையவில்லை. தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் போன்ற சோதனை செய்தபோதும் அது கைகொடுக்கவில்லை. இந்தநிலையில், ஷ்ரேயாஸ் ஐயரை நீண்ட கால அடிப்படையில் கேப்டனாக நியமித்துள்ளது. 2019ல் பிளேஆஃப், 2020ல் இறுதிப் போட்டி என டெல்லி கேப்பிடல்ஸை திறம்பட ஷ்ரேயாஸ் வழிநடத்தியதும் அவரின் தேர்வை நியாயப்படுத்துகிறது. இதனால் முழு எதிர்பார்ப்பும் ஷ்ரேயாஸ் பக்கமே திரும்பியுள்ளது. அவரின் கேப்டன்சி அனுபவம் கேகேஆரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x