Published : 16 Feb 2022 05:16 PM
Last Updated : 16 Feb 2022 05:16 PM

IPL 2022 | ’வரலாற்றில் பங்குபெறுவேன்’ - கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர்

கொல்கத்தா: ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, புதிய கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இயோன் மோர்கன் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஷ் ஐயர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஷ் கடந்த சீசன் வரை, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் புதிய கேப்டனை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஸ்ரேயாஷை வெற்றிகரமாக ஏலம் எடுத்ததில் முதலில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கொல்கத்தா அணியை வழிநடத்தும் வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு யாரும் மாற்றுக்கருத்து இல்லை. ஸ்ரேயாஷ் தரமான பேட்ஸ்மேன் மட்டுமல்ல, கேப்டனாகவும் சிறந்து விளங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இதுதொடர்பாக பேசுகையில், "இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால கேப்டன்களில் ஒருவரான ஸ்ரேயாஷ் கொல்கத்தா அணியை வழிநடத்த உள்ளார் என்பதில் மகிழ்ச்சி. நான் ஸ்ரேயாஷின் ஆட்டத்தையும், கேப்டன்ஷிப்பையும் பலமுறை கண்டு ரசித்துள்ளேன். இப்போது கொல்கத்தா அணி விரும்பும் வெற்றியை நோக்கிய பயணத்தில் ஸ்ரேயாஷுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது குறித்து ஸ்ரேயாஷ் ஐயர் பேசுகையில், "கொல்கத்தா போன்ற மதிப்புமிக்க அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஐபிஎல் ஒரு போட்டியாக பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது. அப்படி இணைந்த பல்வேறு திறமையான நபர்கள் அடங்கிய கொல்கத்தா அணியை வழிநடத்துவதை எதிர்நோக்கி உள்ளேன். எனக்கு வாய்ப்பளித்த கொல்கத்தா அணி உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கொல்கத்தா மற்றும் ஈடன் கார்டன் மைதானம் மிகப்பெரிய வரலாற்றை கொண்டுள்ளன. அந்த வரலாற்றில் நானும் பங்குபெறப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x