Last Updated : 01 Apr, 2016 08:00 PM

 

Published : 01 Apr 2016 08:00 PM
Last Updated : 01 Apr 2016 08:00 PM

இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்ன் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தன்னை அழைத்தால் நிச்சயம் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வேன் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அணியுடன் பணியாற்ற எனக்கு மிகவும் விருப்பம். இந்த அணி திறமை மிக்க அணி, பணியாற்ற மகிழ்ச்சியளிக்கும் அணி. இந்திய வீர்ர்களுக்கு நெருக்கடி அதிகம், கோடிக்கணக்கானோர் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே வாய்ப்பு வந்தால் நான் நிச்சயம் இது பற்றி பரிசீலிப்பேன்.

என் வாழ்க்கையில் நான் எதையும் இதுவரை மறுத்ததில்லை. இந்திய அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் அல்லது ஐபிஎல் அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் நான் எப்போதும் திறந்த மனதுடனேயே இருக்கிறேன்.

நான் எந்த விதத்திலாவது கிரிக்கெட்டுடன் இருக்கவே விரும்புகிறேன், வர்ணனையை நான் மிகவும் நேசிக்கிறேன், ரசிகர்களும் எனது கருத்தை ஆர்வத்துடன் கேட்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.

நான் இப்போதைக்கு பயிற்சியாளராகத் தயாராக இருப்பதாக கருதவில்லை, ஆனால் எந்த ஒரு வாய்ப்பையும் நான் மறுக்கப் போவதில்லை. வாய்ப்புகள் நம் வீட்டுக் கதவை தட்டும்போது அதற்கு நான் மதிப்பளித்து நேர்மையான பதிலையே அளிப்பேன். 100% பங்களிப்பும், அர்ப்பணிப்பும் செய்ய முடியவில்லை எனில் நான் நேர்மையாக வேண்டாம் என்று மறுத்து விடுவேன்.

நேற்று இந்திய அணி அரையிறுதியில் அடிப்படைகளை சரியாகச் செய்யவில்லை. சில நோபால்களை வீசினர். எனக்கு இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளித்தது, காரணம் பவுலிங் தொடங்கும் முன்பே இந்தியாதான் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று நான் கூறிவந்தேன். இந்திய-இங்கிலாந்து இறுதிப் போட்டி அருமையாக இருந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரை விராட் கோலிதான் டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மென். இவர்தான் எனது முதல் தேர்வு, தொடக்க வீரராக கிறிஸ் கெய்லை தேர்வு செய்வேன்.

ஆனாலும் இந்திய அணி இவரையே அதிகம் நம்பியிருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் அருமையாக ஆடி வருகிறார், மே.இ.தீவுகளுக்கு எதிரான அவரது இன்னிங்ஸ் அற்புதம். 192 நல்ல ஸ்கோர்தான், ஆனால் இந்திய அணி போதுமான அளவுக்கு நன்றாக வீசவில்லை. 2 நோபால்கள், பனிப்பொழிவு ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ஓவர்களை மட்டுமே வீசியது ஆகியவை இந்திய அணிக்கு இந்தத் தோல்வியை ஏற்படுத்தியது. ரவீந்திர ஜடேஜாவின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசும் உத்தி சரியல்ல. 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்தார். அவர் பந்து வீச்சு எந்தவிதத்திலும் சரியாக அமையவில்லை.

இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x