Last Updated : 27 Dec, 2021 07:58 AM

 

Published : 27 Dec 2021 07:58 AM
Last Updated : 27 Dec 2021 07:58 AM

ஆசியாவுக்கு வெளியே ராகுல் 5-வது சதம்: வலுவாகத் தொடங்கியது இந்திய அணி: கோலி தேவையில்லாத அவுட்

சதம் அடித்த மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் | படம் உதவிட்விட்டர்


செஞ்சூரியன்:கே.எல்.ராகுலின் அற்புதமான சதம், மயங்க்அகர்வாலின் அரைசதம் ஆகியவற்றால் செஞ்சூரியனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தை அளித்துள்ளது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கே.எல்.ராகுல் ஆசியாவுக்கு வெளியே அடிக்கும் 5-வது சதம் இதுவாகும். தான் களமிறங்கிய வெளிநாடுகளில் எல்லாம் ராகுல் சதம் அடித்து வருகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மே.இ.தீவுகள், ஜம்பாப்பே ஆகிய நாடுகளுக்கு எதிராக ராகுல் சதம்அடித்துவிட்டார்.

தென் ஆப்பிரி்க்காவில் இந்திய அணி பயணம் மேற்கொள்ளும் முன் பேட்டிங் வரிசையில் பலவிதமான கேள்விகள் எழுந்தன. நடுவரிசை மீது பல விமர்சனங்கள் எழுந்தநிலையில் ராகுல் வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல், கேப்டன் கோலியுடன் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தார். தற்போது ரஹானேவுடன் சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய அகர்வால், ராகுல் இருவருமே பெங்களூரைச் சேர்ந்தவர்கள். கடந்த2014ம் ஆண்டு பாக்ஸிங்டே டெஸ்டில் அறிமுகமாகிய ராகுல், 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்டில் சக தோழர் அகர்வாலிடம் தனது இடத்தை இழந்தார், அணியிலிருந்துநீக்கப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகள் இடைவெளியில் இருவரும் நேற்றைய பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இணைந்து கலக்கியுள்ளனர்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 117 ரன்கள் சேர்த்தனர். 2010ம் ஆண்டுக்குப்பின் இந்திய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு சதம் அடிப்பது இதுதான முதல் முறையாகும். அதுமட்டுமல்லாமல்தென் ஆப்பிரிக்காவில் இந்திய தொடக்க ஜோடி சதம்அடித்தது இது 3-வது முறையாகும்.

அருமையான தொடக்கத்தையும் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்ட மயங்க் அகர்வால் வேகமாக ரன்களைச் சேர்த்தார். 89 பந்துகளில் அகர்வாலும், 125 பந்துகளில் ராகுலும் அரைசதம் அடித்தனர்.அகர்வால் 60 ரன்னில் இங்கிடி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
அகர்வால் கால்காப்பில் வாங்கியதும் அதற்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் அப்பீல் செய்ததற்கு களநடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதையடுத்து, டிஆர்எஸ் முறைக்குச் சென்று அதில் அவுட் என்பது உறுதியானதையடுத்து, அகர்வால் வெளியேறினார்.

அடுத்துவந்த புஜாரா முதல் பந்திலேயே பேட் அன்ட் பேடில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டு டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளே வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் 2-வது ஷெசனில்தான் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது.

புஜாராவுக்கு அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ரஹானே, புஜாரா இருவரும் மூத்த வீரர்கள் என்ற கேடயத்தின் மறைவில் இருந்து கொண்டு அணியில் இடம் பிடித்து வந்தனர். ஆனால் இருவரின் ஆட்டமும் தென் ஆப்பிரி்க்காவில் மதிப்பீடு செய்யப்பட்டு அதன்பின் அணியில் தொடர்வார்களா இல்லையை என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தசூழலில் புஜாரா டக்அவுட்டில் ஆட்டமிழந்தது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேப்டன் கோலி, ராகுலுடன் சேர்ந்து ஓரளவுக்கு பேட் செய்தார். அவருக்கேஉரிய ஸ்டைலில் கவர்டிரைவில் சில பவுண்டரிகளை அடித்தார். இருவரும் நிதானமாகவே பேட் செய்து ரன்க்ளைச் சேர்த்தனர். ஆனால், இங்கிடி ஆப்ஃசைட் விலக்கி வீசிய பந்து, நன்றாக அவுட் ஸ்விங் செய்யப்பட்ட பந்தை கோலி தேவையில்லாமல் தொட்டு 35ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ரஹானே, ராகுலுடன் சேர்ந்தார். அணியில் இடத்தைத் தக்கவைக்கும் நோக்குடன் விளையாடிய ரஹானே எளிதாக விக்கெட்டை இழக்கவில்லை. ரஹானேயின் பழைய ஆட்டம் பலஷாட்களில் தெரிந்தது. சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் 218 பந்துகளில் தனது 7-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ராகுல் கணக்கில் ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும்.

தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சைப் பொறுத்தவரை பெரிதாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏதும் கொடுக்கவில்லை. ரபாடா மட்டுமே ஓரளவுக்கு லைன் லென்த்தில் வீசினார். இங்கிடி பந்துவீச்சும், அறிமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜான்ஸன் இருவருமே லைன் லென்த் தவறிவீசியதால் பவுண்டரிகளா இந்திய பேட்ஸ்மேன்கள் விளாசினார்.

தென்ஆப்பிரிக்கப் பயணம் என்றாலே வேகப்பந்துவீச்சு, பவுன்ஸர், பேட்ஸ்மேன்கள் உடலில் அடிவிழுந்து புண்ணாவது என்றெல்லாம் பேசப்பட்டது முடிந்துவிட்டதுபோலும். பல்இல்லாத பாட்டி போன்றுதான் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சு இருக்கிறது.

ஆடுகளம் வேகப்பந்துவீ்ச்சுக்கு சாதமானது என்று இருந்தபோதிலும் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் பெரிதாக பந்துவீச்சு இல்லை என்பதுதான நிதர்சனம்.

ஆடுகளம் முதல்நாளிலும் கடைசி நாளிலும் விளையாடுவதற்கு சிரமமாக இருக்கும் என்று தெரிந்தபின்புதான் கேப்டன் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இன்னும் இந்திய அணியின் கைவசம் விக்கெட்டுகளும், பேட்ஸ்மேன்களும் இருப்பதால், 450 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய நெருக்கடியாக அமையும் ஆட்டம் முடிவை நோக்கு நகரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x