Published : 03 Nov 2021 01:58 PM
Last Updated : 03 Nov 2021 01:58 PM

மூத்த வீரர்களை நம்பியது போதும்; இளைஞர்களைக் களமிறக்குங்கள்: பிசிசிஐக்கு கபில் தேவ் ஆலோசனை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் | கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய அணியில் மூத்த வீரர்களை நம்பியதுபோதும். இனிமேல் இளம் வீரர்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்களைக் களமிறக்கவும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்திய அணியைப் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. இரு ஆட்டங்களிலும் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை.

உலகக் கோப்பை போட்டித் தொடரிலிருந்து இந்திய அணி ஏறக்குறைய வெளியேறிவிட்டது என்றாலும், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா அணிகள் நியூஸிலாந்தை தோற்கடிப்பதைப் பொறுத்துத்தான் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். அதாவது பிற அணிகளின் வெற்றி, தோல்விகள்தான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தனியார் சேனல் ஒன்றில் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய அணிக்குள் இளைஞர்களைக் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி அடிப்படையில்தான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்ற கணக்கு இருக்கக் கூடாது. இந்திய கிரிக்கெட் அதை ஒருபோதும் அங்கீகரிக்காது.

இந்திய அணி தனது சொந்த முயற்சியால் அரையிறுதிப் போட்டிக்குள் செல்ல வேண்டும். மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைச் சார்ந்திருக்காமல் இருப்பதுதான் சிறப்பு.

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள், அனுபவ வீரர்கள் தங்களை நிரூபிக்க முடியாத போது, அடுத்த தலைமுறையினரை அணிக்குள் கொண்டுவர வேண்டும். அடுத்துவரும் போட்டித் தொடருக்குப் பெரிய வீரர்கள், மூத்த வீரர்கள் குறித்து தேர்வாளர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. பயோ-பபுள், மன அழுத்தம், அணித் தேர்வு ஆகியவை முதற்கட்டக் காரணங்களாக இருக்கின்றன. ஐபிஎல் தொடரில் ஏராளமான வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள், இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களை அணிக்குள் சேர்க்க வேண்டும்.

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களில் யார் சிறப்பாக விளையாடினார்கள் என்பது குறித்து பிசிசிஐ சிந்திக்க வேண்டும், அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நேரம். மூத்த வீரர்களை நம்பியது போதும். எவ்வாறு அடுத்த தலைமுறையினரைச் சிறப்பாக உருவாக்குவது எனப் பாருங்கள். தோல்வி அடைந்தால், கவலைப்படாதீர்கள், அதன் மூலம் அனுபவத்தைப் பெறுவீர்கள்.

மூத்த வீரர்கள், அனுபவ வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால், மோசமாக பேட் செய்தால், ஏராளமான விமர்சனங்கள், பிசிசிஐ உடனடியாகத் தலையிட்டு அதிகமான இளம் வீரர்களை உள்ளே கொண்டுவர வேண்டிய நேரமாகும்''.

இ்வ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x