Last Updated : 25 Mar, 2021 03:14 AM

 

Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: தடைதாண்டும் ஓட்டத்தின் கதை

உலகில் முதலில் தோன்றிய விளையாட்டுகளில் ஒன்றாக ஓட்டப்பந்தயம் கருதப்படுகிறது. கற்காலம் முதல் மனிதர்கள் தங்கள் உடல் வலிமையை காட்டும் விஷயங்களில் ஒன்றாக ஓட்டப் பந்தயங்களைப் பயன்படுத்தி வந்தனர். கிரேக்கத்தில் பண்டைய காலகட்டத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் ஓட்டப்பந்தயங்கள் இருந்துள்ளன. இப்படி பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த ஓட்டப்பந்தயத்தில் ஒரு புதுமையைப் புகுத்தும் விதமாக 1830-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் தடைதாண்டும் ஓட்டம்.

ஆக்ஸ்போர்டு மற்றும் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் விளையாட்டு ஆசிரியர்களால் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஓட்டப்பந்தயத்தின்போது, ஓடுதளத்தின் குறுக்கே மரக்கட்டைகள் போடப்பட்டு, அதை வீரர்கள் தாண்டி குதிக்கும் வகையில் போட்டி விதிகள் அமைக்கப்பட்டன. பிற்காலத்தில் இந்த விளையாட்டுக்காகவே 107 சென்டிமீட்டர் உயரமுள்ள தடைகள் வடிவமைக்கப்பட்டு ஓடுதளங்களின் குறுக்கே வைக்கப்பட்டன. அதிகாரப்பூர்வமான முறையில் முதலாவது தடைதாண்டும் ஓட்டம் 1837-ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள எல்டன் கல்லூரியில் நடைபெற்றது.

தடைதாண்டும் ஓட்டத்தைப் பொறுத்தவரை, இதில் பங்கேற்கும் வீரர்கள் 110 மீட்டர் தூரம் ஓடவேண்டும். இப்போட்டியில் முதலாவது தடை 13.72 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு 9.14 மீட்டர் தூரத்துக்கும் இடையே ஒரு தடை என மொத்தம் 10 தடைகளை வீரர்கள் கடக்கவேண்டும். இதே பிரிவில் பெண்களுக்கு 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயங்கள் நடப்படுகின்றன.

ஆண்களுக்கான பிரிவில் 1896-ம் ஆண்டு முதலும், பெண்களுக்கான பிரிவில் 1932-ம் ஆண்டு முதலும் ஒலிம்பிக்கில் தடைதாண்டும் ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டைப் பொறுத்தவரை அமெரிக்க வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் இதுவரை அமெரிக்க வீரர்கள் 19 முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x