Published : 06 Oct 2015 10:07 AM
Last Updated : 06 Oct 2015 10:07 AM

சீனிவாசன் விவகாரத்தில் பிசிசிஐ-யே முடிவு எடுக்கலாம்

பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என்.சீனிவாசன் கலந்து கொள்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பிசிசிஐ திரும்ப பெற்றது.

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்தி முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக் கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டி களில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐபிஎல் செயற்குழு அறிக்கை அளிப்பதாக இருந்தது. இரு அணிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்பது குறித்து அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ஆனால் இந்த செயற்குழுக் கூட்டத்தில் என்.சீனிவாசன் கலந்து கொண்டார். இதற்கு பிசிசிஐ உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரி வித்ததால் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பிசிசிஐ கூட்டங்களில் சீனிவாசன் கலந்து கொள்வது பற்றி சட்டரீதியான தெளிவு இல்லாததால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்க பிசிசிஐ முடிவு செய்தது. இதுதொடர்பாக பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டும் என கூறப் பட்டிருந்ததது. இந்த மனு நேற்று நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், எப்.எம்.ஐ.கலிபுல்லா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

பிசிசிஐ சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், எங்கள் முடிவை நீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டும். விதிமுறைகளை திருத்தி ஐபிஎல் பங்குகளை சீனிவாசன் மாற்றி அமைத்துள்ளார். இது எங்களுக்கு மிகப்பெரிய அவமானம். எனே சீனிவாசன் கிரிக்கெட் வாரியம் தொடர்பான எந்த கூட்டங்களிலும் பங்கேற்க அனுமதிக்காமல் தடைவிதிக்க வேண்டும் என்றார்.

அப்போது என். சீனிவாசன் தொடர்பான இரட்டை ஆதாயம் குறித்து பிசிசிஐ-யே முடிவெடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் இந்த வழக்கை எப்போதும் கண் காணித்துக்கொண்டிருக்க முடி யாது என்று நீதிபதிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து பிசிசிஐ தனது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டது. அதேபோல, உச்ச நீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களைத் தந்ததாக பிசிசிஐ ஜெயலாளர் அனுராக் தாக்குர் மீது தொடர்ந்த மனுவையும் என்.சீனிவாசன் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x