Published : 07 Oct 2015 10:02 AM
Last Updated : 07 Oct 2015 10:02 AM

ஐஎஸ்எல்: கேரளா அபார வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் கடந்த சீசனில் இரு ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட்டிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது கேரளா அணி. அடுத்தடுத்து கோல் கம்பத்தை நோக்கி கேரளா வீரர்கள் பந்தை எடுத்துச் சென்றனர்.

6-வது நிமிடத்தில் பாக்ஸை விட்டு வெளியில் வந்த நார்த் ஈஸ்ட் கோல் கீப்பர் ரெஹனீஷ், பந்தை தவறான திசையில் உதைக்க, கேரளா அணியின் ஸ்டிரைக்கர் முகமது ரபியின் வசம் பந்து சென்றது. அப்போது கோல் கம்பத்தின் அருகில் யாரும் இல்லாததால் ரபி அதை கோலாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவசரப்பட்ட ரபி, பந்தை கோல் கம்பத்துக்கு மேலே தூக்கியடித்து நல்ல வாய்ப்பை வீணடித்தார். இது கேரள ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து 12-வது நிமிடத்தில் கேரள அணிக்கு மற்றொரு கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் இடது பின்கள வீரரான வினீத், இடது புறத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை கிராஸ் செய்தார். ஆனால் கோல் கம்பத்தின் அருகில் நின்ற வலது பின்கள வீரரான ராகுல் பீகே பந்தை வெளியில் அடித்து வீணடித்தார். 18-வது நிமிடத்தில் 3-வது முறையாக கோல் வாய்ப்பை நழுவவிட்டது கேரளா. இதன்பிறகு நார்த் ஈஸ்டும் அபாரமாக ஆடியது. இரு அணிகளும் போராடியபோதும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் விழவில்லை.

2-வது பாதி ஆட்டத்தில் ஸ்டிரைக்கர் கிறிஸ் டாக்னெலுக்கு பதிலாக சான்செஸ் வாட்டை களமிறக்கியது கேரளா. 49-வது நிமிடத்தில் கிடைத்த ‘த்ரோ இன்’ வாய்ப்பில் ராகுல் பீகே அற்புதமாக பந்தை வீசினார். அப்போது சி.கே.வினீத் தலையால் முட்ட முயன்றார். ஆனால் பந்து அவருடைய காலில் பட்டு அருகில் நகர, அதற்குள் வேகமாக வந்த மிட்பீல்டர் ஜோசு, இடது காலால் அசத்தலாக கோலடிக்க, கேரளா 1-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு தொடர்ந்து அபார மாக ஆடிய கேரளா 68-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. முதல் கோலைப் போலவே இந்த முறையும் ராகுல் பீகே ‘த்ரோ இன்’ மூலம் பந்தை பாக்ஸுக்குள் வீசினார். அப்போது பீட்டர் ரேமேஜ் பந்தை தலையால் முட்டி, கோல் கம்பத்தின் அருகில் இருந்த ரபிக்கிடம் கடத்த, அவர் தலையால் முட்டி இந்த கோலை அடித்தார்.

இதனால் நார்த் ஈஸ்ட் அணி நிலைகுலைந்துபோக, அடுத்த 4-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது கேரளா. ரபி கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சான்செஸ், மிகவேகமாக பந்தை எடுத்துச் சென்று கோல் கீப்பரையும் தகர்த்து அவருடைய காலுக்கு இடையில் பந்தை செலுத்தி கோலடித்தார். நார்த் ஈஸ்ட்டின் பின்கள வீரர்கள் முற்றிலு மாக செயலிழந்ததும் இந்த கோலுக்கு ஒரு காரணம் ஆகும்.

மறுமுனையில் தொடர்ந்து போராடிய நார்த் ஈஸ்ட் அணி 82-வது நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தது. அந்த அணியின் நிகோலஸ் வெலஸ் இந்த கோலை அடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் கேரளா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

கோவா-கொல்கத்தா

இடம்: படோர்டா நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x