Published : 18 Oct 2015 03:07 PM
Last Updated : 18 Oct 2015 03:07 PM

யூகி பாம்ப்ரி வெளியேற்றம்

தாஷ்கண்ட் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். பாம்ப்ரி 6-4, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினிடம் தோல்வி கண்டார்.

பாம்ப்ரி 6-4, 3-4 என்ற நிலையில் இருந்தபோது மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று தொடர்ந்து நடந்த இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இஸ்டோமின் 2-வது செட்டை கைப்பற்ற, ஆட்டம் 3-வது செட்டுக்கு நகர்ந்தது. அதிலும் அசத்தலாக ஆடிய இஸ்டோமின், அந்த செட்டையும் கைப்பற்றி பாம்ப்ரியை வீழ்த்தினார்.



அரையிறுதியில் பி.வி.சிந்து

டென்மார்க் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடந்த காலிறுதியில் உலகின் 13-ம் நிலை வீராங்கனையான சிந்து 21-18, 21-19 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த சீனாவின் வாங் இகனை தோற்கடித்தார். சிந்து தனது அரையிறுதியில் ஆல் இங்கிலாந்து போட்டியின் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கரோலின் மரினை சந்திக்கிறார்.



காட்சி போட்டியில் சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்திய டென்னிஸில் இரு துருவங்களாக இருக்கும் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவரத்திலோவா ஆகியோர் பங்கேற்கும் காட்சிப் போட்டி டெல்லியில் வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

மொத்தம் 4 காட்சிப் போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டி டெல்லியிலும், எஞ்சிய போட்டிகள் கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன. கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியாக இந்தப் போட்டி நடைபெறுகிறது. 3 செட்களை கொண்ட இந்தப் போட்டியில் சானியா, மகேஷ் பூபதி ஜோடி, பயஸ்-நவரத்திலோவா ஜோடியை எதிர்கொள்கிறது.



ரஞ்சிகோப்பையில் தமிழகம் திணறல்

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பையில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய மும்பை 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் என்ற நிலையில் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அதிகபட்சமாக சித்தேஷ்லட் 150 ரன்கள் குவித்தார். 93 ஓவர்களில் மும்பை அணி 294 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தமிழகம் தரப்பில் மோகமத் 5, ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அபராஜித் 4, காந்தி 5, தினேஷ்கார்த்திக் 0, இந்திரஜித் 4, முரளி விஜய் 29, பிரசன்னா 6, கவுசிக் 5 ரன்களில் நடையை கட்டினர். நேற்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. ரங்கராஜன் 15, அஸ்வின் கிறிஸ்ட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தமிழக அணி 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x