Last Updated : 08 Oct, 2015 09:55 AM

 

Published : 08 Oct 2015 09:55 AM
Last Updated : 08 Oct 2015 09:55 AM

ஹாக்கி: நியூஸிலாந்துக்கு இந்தியா பதிலடி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன் மூலம் முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

நியூஸிலாந்தின் நெல்சன் நகரில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது இந்திய அணி. 10-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோட்டைவிட்ட இந்திய அணி, 13-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. பைரேந்திர லகரா கொடுத்த கிராஸில் ரமன்தீப் சிங் இந்த கோலை அடித்தார்.

2-வது கால் ஆட்டத்தில் இந்திய வீரர் தரம்வீர் சிங்கின் கோல் முயற்சியை அற்புதமாக தகர்த்தார் நியூஸிலாந்து கோல் கீப்பர். அதேநேரத்தில் நியூஸிலாந்து அணியால் இந்தியாவின் பின்களத்தை தாண்டி முன்னேற முடியவில்லை. 23-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அற்புதமாக முறியடித்தார் இந்திய கோல் கீப்பர் ஜேஷ். முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 3-வது கால் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்தியாவின் மற்றொரு கோல் வாய்ப்பு வீணானது. 35-வது நிமிடத்தில் நியூஸிலாந்தின் மற்றொரு பெனால்டி வாய்ப்பை ஜேஷ் முறியடிக்க, 45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் ஸ்கோரை சமன் செய்தது நியூஸிலாந்து. இந்த கோலை கேன் ரஸல் அடித்தார்.

இதன்பிறகு தீவிர தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்ட இந்திய அணி 52-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. மன்பிரீத் சிங்கின் துல்லியமான பாஸில் லலித் உபாத்யாய் எளிதாக இந்த கோலை அடித்தார். கடைசி நிமிடத்தில் நிகின் திம்மையா 3-வது கோலை அடிக்க, இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நாளை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x