Last Updated : 02 Jan, 2021 03:23 AM

 

Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கும் கிரிக்கெட் போட்டியும்

2028-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் ஒரு ஆட்டமாக சேர்ப்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில்கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நவீன ஒலிம்பிக்கின் தொடக்க காலத்தில், 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது பலருக்கும் தெரியாது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தும், தற்போது கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபாடு காட்டாத பிரான்சும் மட்டுமே மோதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும் இதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த 2 அணிகளும் கழன்றுகொண்டன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டாலும், அதன் முன்னணி டெஸ்ட் வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை. மாறாக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவந்த வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து அணி உருவாக்கப்பட்டது.

இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முழுத் தகுதியுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியை நடத்தாமல், சைக்கிள் பந்தயங்களை நடத்தும் மைதானத்தில் இப்போட்டியை நடத்தியுள்ளனர்.

தற்போது உள்ளதைப் போல் 11 வீரர்களைக் கொண்ட அணிகளாக இல்லாமல், 12 வீரர்களைக் கொண்ட அணிகளாக இங்கிலாந்தும், பிரான்சும் களத்தில் குதித்துள்ளன. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 117 ரன்களையும், பிரான்ஸ் 78 ரன்களையும் குவித்துள்ளன.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என ஆட்டத்தை டிக்ளேர் செய்ய, அடுத்து ஆடிய பிரான்ஸ் 26 ரன்களில் மொத்தமாக சுருண்டுள்ளது.

இப்படியாக மொத்தம் 366 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட இப்போட்டியில் இங்கிலாந்து அணி தங்கம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x