Last Updated : 13 Oct, 2015 07:55 PM

 

Published : 13 Oct 2015 07:55 PM
Last Updated : 13 Oct 2015 07:55 PM

நடுவர் வினீத் குல்கர்னி தீர்ப்புகள் மீது அதிருப்தி: இந்திய அணி நிர்வாகம் புகார்

இந்திய-தென் ஆப்பிரிக்க தொடரில் இதுவரை நடுவராக பணியாற்றி வந்த வினீத் குல்கர்னி ‘திறமையற்றவர்’ என்பதாக இந்திய அணி நிர்வாகம் புகார் எழுப்பியுள்ளது.

4 எல்.பி.டபிள்யூ தீர்ப்புகள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று இந்திய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம்சலாவில் இருமுறை ஜே.பி.டுமினிக்கு எல்.பி. மறுக்கப்பட்டது, முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவணுக்கு மோசமாக எல்.பி. அவுட் கொடுத்தது, அஸ்வினின் முதல் பந்தில் டுபிளெஸ்ஸிஸ் தப்பித்ததும் நடுவர் தீர்ப்பினாலேயே என்று இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.

தரம்சலா ஒருநாள் போட்டியில் டுமினி 5 ரன்களில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு அப்போது 48 பந்துகளில் 96 ரன்கள் வெற்றி பெறத் தேவையாக இருந்தது. இந்நிலையில் நேர் எல்.பி. ஒன்றை அக்சர் படேல் பந்து வீச்சில் மறுத்தார் வினீத் குல்கர்னி.

அதே போட்டியில் டுமினி பிறகு 33 ரன்களில் இருந்த போது தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 23 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது புவனேஷ் குமார் யார்க்கர் ஸ்டம்புக்கு நேராக டுமினியின் பூட்-ஐ தாக்கியது, இது அவுட். ஆனால் அவுட் கொடுக்கவில்லை.

இதனையடுத்து டுமினி அந்தப் போட்டியை வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

கான்பூரில் 304 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து நன்றாக ஆடிவந்த ஷிகர் தவணுக்கு, மோர்னி மோர்கெல் பந்தில் எல்பி தீர்ப்பளித்தார். ரவுண்ட் த விக்கெட்டில் வீசியதோடு, பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது, மேலும் அந்தக் கோணத்தில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்று விடும். ஆனால் வினீத் குல்கர்னி கையை உயர்த்தினார்.

அதே போல் கான்பூரில் டுபிளெஸ்ஸிசை முதல் பந்தில் வீழ்த்தியதாகவே இந்திய அணி கருதுகிறது, அஸ்வினின் அபாரமான பந்து ஒன்று அவரது பேடைத் தாக்கியது, ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

இது குறித்து அணி மேலாளர் வினோத் பத்கே கூறும்போது, “நான் கேப்டனின் ரிப்போர்ட்டை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நடுவர் வினீத் குல்கர்னியை எனது அறிக்கையில் நான் நிச்சயம் குறிப்பிடுவேன். நடுவர் தீர்ப்புகள் சரியாக இல்லை என்பதை அனைவரும் அறிவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x