Published : 14 Oct 2015 05:56 PM
Last Updated : 14 Oct 2015 05:56 PM

தோனியின் கேப்டன் இன்னிங்ஸ்; 92 நாட் அவுட்: இந்தியா 247 ரன்கள்

இந்தூரில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் சரிவிலிருந்த இந்திய அணியை கேப்டன் தோனி தனது இறுதிகட்ட ஆக்ரோஷ பேட்டிங்கினால் மீட்டார். இந்திய அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.

ஒருகட்டத்தில் ரஹானே நீங்கலாக முன்னிலை பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா மடமடவென வீழ்த்த 29.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் என்று தடுமாறியது. அக்சர் படேல் அப்போது 1 சிக்சருடன் 27 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயினிடம் எல்.பி. ஆகி வெளியேறினார்.

பிறகு புவனேஷ் குமார் (14 ரன்கள், 32 பந்துகள் 1 பவுண்டரி) மற்றும் ஹர்பஜன் சிங் (22, 22 பந்துகள் 2 பவுண்டரி 1 சிக்சர்) ஆகியோர் உதவியுடன் அதிரடியில் ஈடுபட்ட தோனி கடைசியில் 86 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 மிகப்பெரிய சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து வழக்கம் போல் கடைசி பந்தை மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்ஸ் அடித்து முடித்தார், ஆனால் கடைசி ஓவரில் அவர் 5 பந்துகளில் ரன் எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

தோனி கட்டமைத்த அற்புத இன்னிங்ஸ்:

19-வது ஓவரில் இறங்கிய தோனி, விக்கெட்டுகள் ஒரு முனையில் சரிய ஒன்று, இரண்டு என்று ரன்களைச் சேர்த்தார். தனது முதல் பவுண்டரியை தனது 14-வது பந்தில்தான் அடித்தார், அது ரபாதாவை அடித்த புல் ஷாட் ஆகும்.

அதன் பிறகு ஸ்டெய்ன் ஓவரில் கடுமையாக ஓடி இரண்டு 2 ரன்களை எடுத்தார். பிறகு 37-வது ஓவரில் டுமினி பந்துக்கு மேலேறி வருவது போல் பாவனை செய்து இருந்த இடத்திலேயே இருந்தார், தவறாகப் புரிந்து கொண்ட டுமினி லெக் திசையில் வீச ஸ்கொயர் லெக் திசையில் பந்து சிக்சருக்குப் பறந்தது.

41-வது ஓவரை ரபாதா வீச வர ஷார்ட் பிட்ச் பந்தை மிக அருமையாக ஆஃப் திசையில் நகர்ந்து காலியாக இருந்த ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு நல்ல கட் ஷாட் பவுண்டரி அடித்தார்.

மீண்டும் டுமினி, தோனி மேலேறி வருவார் என்று நினைத்து ஷார்ட் பிட்சாக வீச நின்ற இடத்திலிருந்து மிட்விக்கெட்டில் சக்தி வாய்ந்த ஷாட்டை அடித்தார் பந்து சிக்சருக்குப் பறந்தது. தோனி 57 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார்.

பிறகு 45-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீச வர, முதலில் லெக் திசையில் அற்புதமாக தட்டி விட்டு பவுண்டரி அடித்தார், அதே ஓவரில் மேலேறி வந்து லாங் ஆனில் மீண்டும் சக்தி வாய்ந்த ஷாட்டை அடித்தார் பந்து சிக்சருக்குப் பறந்தது. அதன் பிறகு ரபாதாவை மிக அருமையாக லாங் ஆஃபில் பவுண்டரி விளாசினார்.

டேல் ஸ்டெய்ன் வீசிய 49-வது ஓவரில் கவர் திசையில் தூக்கி அடித்து ஒரு பவுண்டரியும், பிறகு ஸ்டெய்னின் ஷார்ட் பிட்ச் முயற்சியை ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரி என்றும் ஆக்ரோஷம் காட்டினார் தோனி.

கடைசி ஓவரின் போது தோனி 86 ரன்களில் இருந்தார். ஆனால் ரபாதா அந்த ஓவரை மீண்டும் அருமையாகவே வீசினார், மோஹித் சர்மாவை ஆடவைக்க வேண்டாம் என்ற முடிவில் தோனி இருந்தார், விட்டால் அனைத்துப் பந்துகளையும் பவுண்டரி அடிக்கும் மூடில் இருந்தார் தோனி, ஆனால் ரபாதா அருமையாக வீசினார், கடைசி பந்து மட்டும் ஷார்ட் பிட்சாக அமைய மிட்விக்கெட்டில் பந்து சிக்சருக்குப் பறக்க தோனி 92 ரன்களில் முடிந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டுமினிக்கு சாத்துமுறை. 9 ஓவர்களில் 59 ரன்கள் விளாசப்பட்டார்.

தோனியின் ஷார்ட் தேர்வும், அதனை அவர் அடித்துக் காட்டிய விதமும் அபாரமாக இருந்தது. இந்த இன்னிங்ஸ் தோனிக்கு ஒரு திருப்பு முனை இன்னிங்ஸ் ஆகும்.

இந்த நிலையிலிருந்து வெற்றி பெற அஸ்வினின் உதவி அவசியம், ஆனால் அவர் காயம் காரணமாக இல்லாததால், ஹர்பஜன், அக்சர் படேல், வேகப்பந்து வீச்சாளர்கள் தோனியின் விடா முயற்சி இன்னிங்ஸுக்கு நியாயம் செய்வார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.கடந்த போட்டியின் சிறந்த இந்திய பவுலர் அமித் மிஸ்ராவை உட்கார வைத்தது சரியா தவறா என்பது போட்டியின் முடிவைப் பொறுத்து அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x