Last Updated : 07 Dec, 2020 03:14 AM

 

Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: தடைகளைக் கடந்துவந்த கால்பந்து

உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்ற பெருமை கால்பந்து விளையாட்டுக்கு உண்டு. ரசிகர்களின் எண்ணிக்கையைப் போன்றே தோற்றத்திலும் முதன்மையானது கால்பந்து விளையாட்டு. கற்காலத்திலேயே, அதாவது 3,000 ஆண்டுகளுக்கும் முன்பே மெசோஅமெரிக்கன் கலாச் சாரத்தில் (Mesoamerican cultures) கால்பந்து விளையாட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் உருண்டை யான கற்களை வைத்து கால்பந்து போட்டிகளை ஆடியுள்ளனர். கல்லால் ஆன இந்தப் பந்துகள் சூரியனை குறிப்பதாக கருதப்பட்டது. அதேபோல் போட்டியில் தோற்கும் அணியின் கேப்டனை நரபலியிடும் வழக்கமும் அக்காலத்தில் இருந்ததாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.

ஆசியாவில் தோலால் செய்யப்பட்ட பந்துகளால் கால்பந்து போட்டிகளில் ஆடும் வழக்கம் முதலில் சீனாவில் தோன்றி, அங்கிருந்து ஜப்பானுக்கு பரவி யுள்ளது. அதே நேரத்தில் தோலால் செய்யப்பட்ட பந்தில் முடிகளை நிரப்பி கிரேக்க நாட்டவர்கள் கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரோமானியர்களும் இங்கிலாந்து நாட்டினரும் கால்பந்து விளையாட்டை ஆடத் தொடங்கினர். இப்படி அங்கொன்றும் இங்கொன்று மாக ஆடப்பட்டு வந்த கால்பந்து விளையாட்டு,கிபி 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவலாக ஆடப்பட்டது.

ஆரம்ப காலகட்டத்தில் கால்பந்து விளையாட்டில் கால்களுடன் கைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இக்காலகட்டத்தில் எதிரணி வீரர்களைக் கையால் தள்ளிவிடுவது வழக்கமாக இருந்ததால் கால்பந்து, வன்முறை ஆட்டமாக கருதப்பட்டது. இதன் காரணமாக 1314-ம் ஆண்டில் இங்கிலாந்து மன்னராக இருந்த இரண்டாம் எட்வர்ட், இவ்விளையாட்டை தடை செய்துள்ளார். அவருக்கு பிறகு வந்த இங்கிலாந்து மன்னர்களும் கால்பந்தை தடைசெய்ய, 15-ம் நூற்றாண்டில்தான் மீண்டும் அங்கு கால்பந்துக்கு களம் கிடைத்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் கால்பந்து விளையாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, மேக்கப் செய்த ஹீரோயினைப் போல், புதிய பளபளப்புடன் உலகைக் கவரத் தொடங்கியது கால்பந்து விளையாட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x