Published : 23 Mar 2020 07:46 AM
Last Updated : 23 Mar 2020 07:46 AM

கரோனா வைரஸ் பாதிப்பு: ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் முன்னாள் உரிமையாளர் உயிரிழப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகப் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் முன்னாள் உரிமையாளர் உயிரிழந்துள்ளது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. அந்நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க மருத்துவத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் லோரென்சோ சான்ஸ், கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். 76 வயதான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த முடிவுகள் நேற்று முன்தினம் காலை கிடைத்தன. அப்போது அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனிமை வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்ததை, லோரென் சோவின் மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

லோரென்சோ சான்ஸ் 1995 முதல் 2000 வரை ரியல் மாட்ரிட் அணியின் உரிமையாளராக இருந்தார். அப்போது ரியல் மாட்ரிட் அணியானது, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியிருந்தது. ஒரு முறை லா லிகா கோப்பையையும் அந்த அணி வென்றிருந்தது. இவரது உயிரிழப்பு ஸ்பெயின் நாட்டிலுள்ள விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x