Published : 12 Jul 2015 12:48 PM
Last Updated : 12 Jul 2015 12:48 PM

விம்பிள்டன் டென்னிஸ்: வரலாறு படைப்பாரா ஃபெடரர்?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியிருக்கும் இந்த ஆட்டத்தில் ஃபெடரர் வெற்றி பெறும்பட்சத்தில் விம்பிள்டனில் அதிகமுறை (8) பட்டம் வென்றவர் என்ற வரலாற்றைப் படைப்பதோடு, ஓபன் எராவில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் (33 வயது 338 நாட்கள்) என்ற பெருமையையும் பெறுவார். விம்பிள்டனில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷேவிடம் உள்ளது. அவர் 1975 விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றபோது அவர் 31 வயது 360 நாட்களை எட்டியிருந்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர் 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் முர்ரேவை வீழ்த்தினார். ஆக்ரோஷமாக ஃபெடரர் ஆடிய அரையிறுதி ஆட்டம், 2003 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் அவர் உச்சகட்ட பார்மில் இருந்தபோது ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்தியது. இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஃபெடரர், அதில் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 2003 முதல் 2010 வரையிலான காலத்தில்தான் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 26-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரருக்கு, இது 10-வது விம்பிள்டன் இறுதிப் போட்டியாகும். கடந்த ஆண்டு விம்பிள்டனில் ஜோகோவிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க ஃபெடரருக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதில் வெல்லும்பட்சத்தில் விம்பிள்டனில் 80-வது வெற்றியைப் பதிவு செய்வார் ஃபெடரர்.

ஜோகோவிச்சும், ஃபெடரரும் இதுவரை 39 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 20 முறையும், ஜோகோவிச் 19 முறையும் வெற்றி கண்டுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 12 முறை மோதியுள்ள இருவரும் தலா 6 வெற்றிகளை ருசித்துள்ளனர்.

8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஜோகோவிச்சுக்கு, இது 17-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியாகும். இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபன், இண்டியன்ஸ்வெல்ஸ், மியாமி, மான்டிகார்லோ, ரோம் மாஸ்டர்ஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், 47 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். 3-ல் மட்டுமே தோற்றிருக்கிறார்.

மொத்தத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டி அக்னி பரீட்சையாகவே பார்க்கப் படுகிறது. ஜோகோவிச் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வந்திருக்கும் அதேவேளையில் ஃபெடரர் தனது உச்சகட்ட பார்முக்கு வந்திருப்பதால், கடந்த முறையப் போன்றே இந்த முறையும் ஆட்டம் நீண்ட நேரம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x