Published : 14 Sep 2019 05:13 PM
Last Updated : 14 Sep 2019 05:13 PM

கோபப்படுவதும், தேவையற்ற உணர்ச்சியைக் காட்டுவதும் ஒருபோதும் உதவாது: பும்ராவின் தத்துவமுத்து 

டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆடத்தான் எனக்கு தன்னம்பிக்கை அதிகமாகிறது என்று கூறிய ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்காவில் தான் முதன் முதலில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது தன் கனவு நினைவான தருணமாகக் குறிப்பிட்டார்.

மேலும் தன்னை ஒரு சிறந்த பவுலராக உருவாக்கியிருப்பது தனது சுயநம்பிக்கைதான் என்று அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பும்ரா கூறியதாவது:

“ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும் அது குறித்து நான் என்ன கருதுகிறேனோ அதைத்தான் நான் நம்புவேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இதுதான் நான் பின்பற்றும் தத்துவம்.

மற்றவர்கள் கருத்து ஒரு பிரச்சினையல்ல, அவர்கள் நம் மீது அன்பைப் பொழிவார்களா நல்லது, அதே வேளையில் அன்பைப் பொழியவில்லையா அதுவும் நல்லதுதான். நம் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். நம்பிக்கை இருந்தால் அனைத்தும் நினைத்த படி நடக்கும்.

அமைதியான மன நிலை, தன்னம்பிக்கைதான் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது. கோபப்பட்டாலோ, தேவையில்லாமல் உணர்ச்சிவயப்படுதலோ நிச்சயம் நமக்கு உதவப்போவதில்லை. அது நம் ஆற்றலை விரயம் செய்வதாகும்.

எனவே நெருக்கடி நிலை ஏற்பட்டால் புன்னகையுடன் எதிர்கொள்வேன். பிறகு எனக்கு நானே கூறிக்கொள்வேன், ‘இதோ பார் நீ சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுகிறாய், உயர்ந்த இடத்தில் ஆடிக்கொண்டிருக்கிறாய், இந்த இடத்துக்கு வருவது குழந்தைப் பருவ கனவாகும். எனவே ஏன் வெறுப்படைகிறாய்’ என எனக்கு நானே கூறிக்கொள்வேன்.

ஆங்காங்கே சிலபல வெறுப்புகள் ஏற்படவே செய்யும் ஆனால் வாய்ப்பு பற்றி மகிழ்ச்சியுடன் இருப்பதே சிறந்தது” என்றார் பும்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x