Last Updated : 29 Jul, 2015 09:41 AM

 

Published : 29 Jul 2015 09:41 AM
Last Updated : 29 Jul 2015 09:41 AM

ஐஎஸ்எல்: மும்பை அணியில் செலிம் பெனாச்சூர்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் மும்பை சிட்டி எப்.சி. அணிக்காக டுனிசியா வீரர் செலிம் பெனாச்சூர் களமிறங்குகிறார்.

இது தொடர்பாக மும்பை அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டுனிசியாவின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் பெனாச்சூர், 2002 உலகக் கோப்பையில் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடியபோது தனது அசத்தலான பாஸ் உள்ளிட்டவற்றால் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய ஆட்டநுட்பமும், அனுபவமும் வரும் சீசனில் மும்பை அணிக்கு பெரிய பலமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

2001-ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் மூலம் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய பெனாச்சூர் 2005 வரை அந்த அணியின் தாக்குதல் மிட்பீல்டராக திகழ்ந்தார். 2009-ல் ஸ்பெயின் லீக்கில் ஆடி வரும் மலாகா அணிக்கு இடம்பெயர்ந்தார். அதன்பிறகு சைப்ரஸ் கிளப் அணியான ஏபோல் அணியுடன் 2 ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்ட அவர், அந்த அணி 2012-13 சீசனில் சைப்ரஸ் முதல் டிவிசனில் வெற்றி பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தார்.

உதவி பயிற்சியாளராக பாஸ்டாப் ராய் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் விளையாடவுள்ள அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பாஸ்டாப் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஸ்டாப் ராய், மோகன் பகான், முகமதியன் ஸ்போர்ட்டிங், டோலிகுங்கே அக்ரகாமி, சுங்கவரித் துறை, ஜார்ஜ் டெலகிராப் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் ஆவார். அவர் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டனி லோபஸுக்கு உதவியாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராய், “நடப்பு சாம்பியனான அட்லெடிகோ அணியின் உதவிப் பயிற்சி யாளராக செயல்படவிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் எனது கனவு நனவாகியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x