Published : 13 Sep 2019 04:55 PM
Last Updated : 13 Sep 2019 04:55 PM

ஒரே டெஸ்ட் தொடரில் 8 முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் அவுட்: தொடக்க வீரராக டேவிட் வார்னரின் எதிர்மறைச் சாதனை

ஓவல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று இங்கிலாந்து 294 ரன்களுக்குச் சுருண்டதையடுத்து பேட் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணி 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கிரீசில் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளனர். வார்னர், மார்கஸ் ஹாரிஸ் இருவரது விக்கெட்டையும் ஜோப்ரா ஆர்ச்சர் கைப்பற்றினார். ஆர்ச்சர் தீப்போறி பறக்க பந்து வீசி வருகிறார்.

டேவிட் வார்னருக்கு இந்தத் தொடர் மறக்கப்பட வேண்டிய துர்சொப்பனத் தொடராக அமைந்தது. இன்று அவர் 5 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டுமொரு ஒற்றை இலக்க ஸ்கோருக்கு ஆர்ச்சர் பந்தை கட் செய்ய முயன்ற போது மெலிதான எட்ஜில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இந்த அவுட் மீது சர்ச்சைகள் கிளம்பியுள்ளன, ஏனெனில் களநடுவர் நாட் அவுட் என்றார் இங்கிலாந்து ரிவியூ செய்தது, இதில் மெலிதான எட்ஜ் அல்ட்ரா எட்ஜ் காட்டியது, ஆனால் பந்துக்கும் மட்டைக்கும் இடைவெளி இருந்தது போல்தான் ரீப்ளேயில் தெரிந்தது.

சர்ச்சை அவுட் ஒருபுறமிருக்க இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் 8 முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்த முதல் தொடக்க வீரர் என்ற எதிர்மறைச் சாதனைக்குச் சொந்தக் காரர் ஆனார் டேவிட் வார்னர்.

இவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் அன்ஷுமன் கெய்க்வாட் மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரே தொடரில் 7 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இவரும் 5 டெஸ்ட்களில் 7 ஒற்றை இலக்க ஸ்கோர்.

இங்கிலாந்தின் மைக் ஆர்தர்ட்டன் 6 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 7 முறை தொடக்க வீரராக ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார். நடப்பு இந்திய வீரர்களில் கே.எல்.ராகுல் 2015 இலங்கை தொடரில் 3 போட்டிகளில் தொடக்க வீரராக 5 முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x