Published : 13 Sep 2019 10:21 AM
Last Updated : 13 Sep 2019 10:21 AM

விராட் கோலி பதிவால் பரபரப்பு; தோனி ஓய்வு பெறுவதாக வெளியான தகவல் வதந்தி: ட்விட்டரில் சாக் ஷி பதில்

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் அப்போதையகேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடிய படத்தை ட்விட்டரில் பதிவேற்றிருந்தார்.

அத்துடன் அந்த பதிவில், “இந்த ஆட்டத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. சிறப்பு வாய்ந்த இரவு. இந்த மனிதர் (தோனி), என்னை உடற்தகுதி சோதனையில் ஓடுவது போன்று ரன் எடுக்க ஓடவைத்தார்” என கூறியிருந்தார்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 51 பந்துகளில் 82 ரன்களையும், தோனி 18 ரன்களையும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்திருந்தனர். இந்தகூட்டணி 67 ரன்களை சேர்த்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தது.

தோனியை பாராட்டும் வகையில் விராட்கோலி வெளியிட்ட இந்த பதிவானது, அவரது எதிர்கால கிரிக்கெட்டுடன் எந்தவித தொடர்பையும் இணைக்காமலேயே இருந்தது. விராட் கோலியின் பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே சமூகவலைதள பக்கங்களில் தோனி ஓய்வு பெறுகிறார், இன்று (நேற்று) மாலை அறிவிக்கிறார் என ஊகங்கள் உலாவரத் தொடங்கியது. இது டிரென்
டிங்காவும் மாறியது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் தேர்வு முடிந்ததும் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது இதுதொடர்பாக எழுந்த கேள்விக்கு பதில் அளித்த எம்எஸ்கே பிரசாத், “எங்கிருந்துதான் இத்தகைய வதந்திகள் தொடங்குகிறதோ என்று தெரியவில்லை. நிச்சயம் அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று பதிலளித்தார். இதற்கிடையே தோனியின் மனைவி சாக் ஷி, தோனி ஓய்வு பெறுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

38 வயதான தோனி தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருகிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து ராணுவத்தில் சேவை செய்வதற்காக சுமார் 2 மாத காலங்கள் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஒதுங்கியிருந்தார். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற குறுகிய வடிவிலான தொடர் மற்றும் தற்போது நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. ராணுவ சேவை செய்ய இரு மாதங்கள் ஓய்வு எடுத்ததில் இருந்தே தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவது குறித்த ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x