Published : 12 Jul 2015 12:44 PM
Last Updated : 12 Jul 2015 12:44 PM

மகளிர் டி20: இந்தியாவை வீழ்த்தியது நியூஸி.

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

பெங்களூரில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற, 19.5 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்து தரப்பில் நீல்சன், பிராட்மூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான பிரைஸ்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க வீராங்கனையான டிவைன் வெளுத்து வாங்கினார். 22 பந்துகளைச் சந்தித்த அவர் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நியூஸிலாந்து.

சாட்டர்ட்வெய்ட் 39, காஸ்பெரீக் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து. 2-வது போட்டி பெங்களூரில் நாளை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x