Last Updated : 05 Jun, 2015 09:26 AM

 

Published : 05 Jun 2015 09:26 AM
Last Updated : 05 Jun 2015 09:26 AM

இந்திய கிரிக்கெட் மும்மூர்த்திகளின் வேலை என்ன?

ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள “வேலைவாய்ப்புதான்” கிரிக்கெட் போட்டிகள் ஓய்ந்துள்ள நிலையில் கிரிக்கெட் குறித்த பரபரப்பான செய்தியாக இருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகிய மும்மூர்த்திகள்தான் கிரிக்கெட் உலகத்தின் செல்வாக்கும், செல்வச் செழிப்பும் மிக்க வாரியத்தால் ஆலோசகர்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துக்கும், தேசிய அணிக்கும் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ஆலோசனை வழங்குவார்கள். வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய அணியினர் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு இந்த மூவரிடமும் ஆலோசனை கேட்கப்படும். இதுதவிர சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடுமை யான சவால்களை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தயார்படுத்தும் வகையில் உள்ளூர் போட்டிகளை பலப்படுத்த வழிகாட்டுதல் பெறப்படும் என்று அவர்கள் நியமனத்தின்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதை ஒரு தெளிவற்ற, மேம்போக்கான அறிவிப்பாகவே நாம் பார்க்க முடிகிறது.

இந்த நியமனம் தொடர்பாக கங்குலி கூறிய கருத்து அதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. “இந்திய கிரிக்கெட் அணிக்காக நான் என்ன பணி செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியவில்லை” என்று கங்குலி கூறினார். இதன் மூலம் ஆலோசகர்களின் பணி என்ன என்பது குறித்து அவர்களுடன் பிசிசிஐ கலந்தாலோசிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. இதுவே குழப்பத்தில் உள்ள நிலையில், ராகுல் திராவிட் ஏன் இந்த ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. அவர் இக்குழுவில் இணைய விரும்பவில்லை என்றும் தகவல் பரவி இந்திய கிரிக்கெட்டில் முக்கிய விவாதப் பொருள் ஆனது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கி விளையாடிய காலகட்டத்தில் கேப்டன் பொறுப்பு உட்பட பல்வேறு நிலைகளில் தனக்கு போட்டியாக விளங்கிய சவுரவ் கங்குலி இடம்பெற்றுள்ள குழுவில் பங்கேற்க ராகுல் திராவிட் விரும்பவில்லை என்று ஓர் உறுதி செய்யப்படாத தகவல் கலகம் ஏற்படுத்தியது. ஆனால் நான் இதனை நம்பவில்லை.

அடுத்த நாளே ஊகச் செய்தியா உண்மைச் செய்தியா என்று புரிந்துகொள்ள முடியாதபடி கேள்விக்குறியுடன் ஒரு செய்தி, நாளிதழ்களில் வெளியானது. 19 வயதுக்குட்பட்ட அல்லது 16 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட்டை நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. எனவேதான் ஆலோசனைக் குழுவில் அவர் இடம்பெறவில்லை என்று சத்தியம் செய்த அந்த பத்திரிகை செய்தி.

இது இப்படி இருக்க, சற்று “பழைய” முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெரும் மனக்குறையும் அடுத்த நாளே வெளிப்பட்டது. முன்னாள் டெஸ்ட் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி, “ஆலோசகர்களின் பங்களிப்பு என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். தன்னையும் தனது சமகால வீரர்களையும் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று குறைபட்டுக் கொண்டார் கிர்மானி.

உண்மை என்னவென்றால், பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ எப்போதுமே தங்கள் பக்கம் வைத்துக் கொள்கிறது. சமீபகாலத்தில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் பல கோடி ரூபாய் சம்பளத்துடன் பிசிசிஐயில் “வேலையற்ற வேலைக்கு” பணி ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இது தவிர கிரிக்கெட் விமர்சகர்களாகவும் அவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு கொட்டிக் கொடுக்கப்பட்ட கோடி ரூபாய்கள் தொடர்பான செய்தி வெளியானதும், அது தொடர்பாக எழும்பிய கேள்விகளை சமாளிக்க பிசிசிஐ சிரமப்பட வேண்டியதாயிற்று.

உலகக் கோப்பை போட்டியின்போது ரவி சாஸ்திரிக்காக உருவாக்கப்பட்ட அணி இயக்குநர் பதவி இப்போது அவரது நிரந்தர பதவியாகிவிட்டது. இப்போது பிசிசிஐயின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளராகிவிட்டார் சாஸ்திரி. இது போன்ற விஷயத்தில் பிசிசிஐ எடுக்கும் முடிவுகள் விநோதமானவைதான். இந்தியாவில் பணம் கொழிக்கும் அமைப்பான பிசிசிஐ எப்போதும் சிறு குழுவால் கட்டுப்படுத்தப்படும் அமைப்பாகவே உள்ளது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அதை தங்கள் கைகளில் வைத்துள்ளனர். அதில் நடைபெறும் ஊழல்களும், முறைகேடுளும் எண்ணிலடங்காதவைதான். ஐபிஎல் கிரிக்கெட்டை நிறுவியவர் இப்போது தலைமறைவாக உள்ளார். ஐசிசி சேர்மனின் மருமகன் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறையில் இருந்தார். ஐபிஎல் அணி உரிமையாளர்களும், சில வீரர்களும் முறைகேட்டில் சிக்கி சின்னாபின்னமானவர்கள்தான்.

இதை சரி செய்ய யார் முன்வருவார்கள் என்று தேடினால், யாரும் இல்லை என்பதுதான் பதில். அதிக பணம் புழங்கும் இடத்தில் ஊழலும் இருக்கும் என்பது விதி. பிசிசிஐ மட்டும் இதில் இருந்து விதிவிலக்காக இருக்குமா என்ன? இதனால்தான் அரசியல்வாதிகளும் இந்த வாரியத்தின் மீது அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். பிரதமர் மோடிகூட குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர்தான். காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும் இந்த வகையில் கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்டவர்கள்.

ஐபிஎல் என்னும் பணம் கறக்கும் பசுவை இந்தியாவில் களமிறக்கிய பிறகு, அதன் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பது வெளியே தெரியாமலேயே போய்விட்டது. எனவேதான் கிரிக்கெட் தொடர்பாக மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களை தங்களுடனேயே வைத்துக்கொள்ள பிசிசிஐ விரும்புகிறது என்பது எனது கணிப்பு. இந்த அடிப்படையில்தான் சச்சின், கங்குலி, லட்சுமணுக்கு ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சச்சின் போன்ற மக்களின் அபிமானத்தை பெற்ற வீரர்கள் பிசிசிஐ-யில் நடக்கும் முறைகேடுகள், பாரபட்சங்கள் குறித்து வெளியே இருந்து பேசினால் அது பிசிசிஐ-யின் வியாபாரத்தை வெகுவாக பாதிக்கும். கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் குறைந்தால் அது பிசிசிஐ-க்கு பேராபத்து.

தங்களுக்கு வழங்கப்படும் உண்மையான பணி என்ன என்பதை முன்னதாகவே உணர்ந்து கொண்டதால்தான் திராவிட் ஆலோசகர் பதவியை ஏற்கவில்லை என்று நினைக்கிறேன். எது எப்படியும் போகட்டும், முன்பு களத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்ற போராடியதுபோல, இப்போது பிசிசிஐ-யின் நம்பிக்கையை காப்பாற்ற சச்சின் உள்ளிட்டோர் போராடித்தான் ஆக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x