Last Updated : 12 Jun, 2015 03:01 PM

 

Published : 12 Jun 2015 03:01 PM
Last Updated : 12 Jun 2015 03:01 PM

ஆஸி.க்கு எதிராக 0-4 தோல்வியின்போதே தோனி கேப்டன் பதவியை இழந்திருப்பார்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அணித்தேர்வுக்குழு தலைவராக இருந்த போது தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்த ராஜா வெங்கட் 2011-12 ஆஸ்திரேலியா தொடரின் போதே தோனி கேப்டன்சியை இழந்திருப்பார் என்று கூறியுள்ளார்.

வங்காள செய்தி பத்திரிகை ஒன்றில் பத்தி எழுதிய ராஜா வெங்கட் அதில் மேலும் கூறும் போது, முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் அப்போது அதனை ஏற்காததால் தோனி கேப்டனாக தொடர முடிந்தது என்று எழுதியுள்ளார்.

“2011-12 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராகும் அது. முதல் 3 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த்து. அப்போது நாங்கள் கேப்டன்சியில் மாற்றம் தேவை என்று தீர்மானித்தோம்.

அந்தத் தொடரைக் காண சென்றிருந்த வடக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் தேர்வாளர்களான மொஹீந்தர் அமர்நாத் மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகியோர் அங்கு சென்று திரும்பிய பிறகு அணிக்குள் கோஷ்டிகள் உள்ளன என்றும் அணி உணர்வு மிகவும் கீழ்நிலையில் உள்ளது என்றும் புகார் தெரிவித்தனர்.

அணியில் ஒற்றுமையை மீட்க வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று தீர்மானித்தோம், விராட் கோலி எங்களது தெரிவாக இருந்தது. ஏனெனில் அவர் எந்த ஒரு கோஷ்டியிலும் இல்லை, மேலும் 2010-11 தியோதர் டிராபியை வடக்கு மண்டலம் கோலி தலைமையில் வென்றிருந்தது. இதற்கு முன்னதாக அண்டர்-19 அணியின் கேப்டனாகவும் எங்கள் மதிப்பில் அவர் உயர்நிலையில் இருந்தார்.

நாங்கள் அனைவரும் தோனியின் கேப்டன்சி காலம் முடிந்துவிட்டது, கோலியை நியமிப்பதே சரி என்று முடிவுக்கு ஒருமனதாக வந்திருந்தோம். அதே தொடரின் ஒருநாள் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய நாங்கள் சந்தித்தோம், ஆனால் அயல்நாட்டு தொடர்களைப் பொறுத்தவரை பிசிசிஐ தலைவர் இல்லாமல் நாங்கள் அணியை அறிவிக்க முடியாது, பிசிசிஐ விதிமுறையும் அதுதான்.

அப்போது தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்க சீனிவாசன் அனுமதிக்கவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன்பே விராட் கோலியை கேப்டனாக்க நாங்கள் தீர்மானித்தோம், ஆனால் எங்கள் முடிவின் மீது சீனிவாசன் திருப்தி கொள்ளவில்லை. விராட் ஒரு அபாரமான பேட்ஸ்மென், அணியுடன் ஒத்துப்போவதில் திறமையானவர், பிறகு விராட் கோலி ஒர் போராட்ட குணம் மிக்கவர், இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் கோலி மூலம் திறக்கப்படும்” என்று அந்தப் பத்தியில் ராஜா வெங்கட் தெரிவித்தார்.

அப்போதே மொஹீந்தர் அமர்நாத், தோனியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்களை வைத்ததாக செய்திகள் வெளியாகின. தோனியின் எதிர்மறை தலைமைத்துவம், பந்து எங்கெல்லாம் அடிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பீல்டர்களைக் கொண்டு செல்லும் முதிர்ச்சியற்ற போக்கு, அவர் கேப்டனாக நீடிப்பது குறித்த தனது அக்கறைகளை மொஹீந்தர் அமர்நாத் தெரிவித்ததாக செய்திகள் அடிபட்டன. விரேந்திர சேவாகை கேப்டனாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார்.

தற்போது ராஜா வெங்கட்டின் இந்த பத்தி பற்றி அமர்நாத் கூறும்போது, “அவர் (ராஜா வெங்கட்) என்ன எழுதியுள்ளாரோ அதனை நாம் மதிக்க வேண்டும். நான் அதனை படித்துப் பார்த்தேன். விவரங்கள் அதில் உள்ளன. என்னுடைய சார்பாக நான் எதையும் அதில் சேர்க்கவிரும்பவில்லை. எப்போது கூற வேண்டுமோ அப்போது இது பற்றி கூறுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x