Published : 09 Jun 2015 05:04 PM
Last Updated : 09 Jun 2015 05:04 PM

இந்திய டெஸ்ட் அணியின் புத்தெழுச்சிக்கு வித்திடுமா கோலி தலைமை?

பாதுல்லா மைதானத்தில் புதன்கிழமை வங்கதேச அணியை இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது.

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் காலிறுதியில் நுழைந்து இந்திய அணியிடம் தோற்று வெளியேறிய வங்கதேச அணி, அதன் பிறகு ரோஹித் சர்மாவுக்கு அன்று கொடுத்த நோ-பால் தீர்ப்பு குறித்து தாறுமாறாக கோபாவேசத்தில் கடும் கருத்துகளை பிசிசிஐ-க்கு எதிராக வைத்தனர்.

வங்கதேச அணி வீரர்கள் சிலரும் இந்திய அணியின் வெற்றியை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினர். இந்நிலையில் நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக, உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை ஒருநாள் போட்டித் தொடரில் 3-0 என்று கிளீன் ஸ்வீப் செய்ததோடு டி20-யிலும் வீழ்த்தியது. டெஸ்ட் போட்டியில் 0-1 என்று தோற்றது. ஆனாலும் சில சாதனைகளை முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர்கள் பேட்டிங்கில் நிகழ்த்தினர்.

வங்கதேச அணியில் குறிப்பாக தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்த மஹமுதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், டெஸ்ட் பேட்டிங் ஸ்பெஷலிஸ்ட் என்று கருதப்படும் மொமினுல் ஹக் ஆகியோர் கவனிக்கத்தக்கவர்கள். பந்துவீச்சில் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வதுடன், எழுப்பவும் செய்யும் மொகமது ஷாகித் என்ற வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் கவனிக்கத் தக்கவர். பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்குக்கு சாதகமான ஆட்டக்களத்தில் இவர் சிறப்பாகவே வீசினார். அதே போல் ரூபல் ஹுசைன் விளையாடுகிறார். இவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் ஒரு வீச்சாளர்.

தற்போதைய வங்கதேச அணியில் 7 வீரர்கள், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர். மாறாக இந்திய அணியில் 3 வீரர்கள் மட்டுமே விளையாடியுள்ளனர்.

விராட் கோலி முழுநேர டெஸ்ட் கேப்டனாக களமிறங்குகிறார். அவர் பேசுவதை வைத்துப் பார்க்கும் போது, வங்கதேசம் நிச்சயம் தடுமாறும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இவர் கடைசி நாளன்று இலக்கைத் துரத்தி வெற்றி பெற ஆடியது ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, ஒரு கேப்டனாக துரத்தலை சதத்துடன் வழிநடத்தினார். மேலும் அது தோல்வியே அல்ல என்றும் வாதிட்டார், இத்தகைய மனப்பாங்கு கொண்ட கேப்டன்கள் இந்திய மண்ணிலிருந்து உருவாவது அரிதே,

எனவே முதன்முதலாக தோற்றாலும் பரவாயில்லை வெற்றி பெறவே ஆட வேண்டும், டிரா என்பது கடைசிபட்சமாக இருக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு இந்திய கேப்டனும் கூறியதில்லை என்றே படுகிறது. அவரும் அந்த அணுகுமுறையையே கையாளவார் என்று எதிர்பார்க்கலாம்.

நாளைய டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஹர்பஜன் இருவருமே இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், வங்கதேச அணியில் இடது கை வீரர்கள் அதிகம் என்பதால் ஆஃப் ஸ்பின் பலம் தேவை என்பதால்தான் ஹர்பஜன் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

வேகப்பந்து வீச்சில் புவனேஷ் குமார் தேவையில்லை என்று நினைத்தால், ஏனெனில் அவரது வேகம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், அல்லது இசாந்த் சர்மா அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. 3 வேகம், 2 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. நம்மைக் கேட்டால் இசாந்த் சர்மா தேவையில்லை என்றே கூற வேண்டியுள்ளது. வருண், உமேஷ் போன்றவர்களுக்கு ஒரு அனுபவம் பெற நல்ல வாய்ப்பாக வங்கதேசத்தை தேர்ந்தெடுப்பது சிறந்ததுதான்.

விஜய், தவன், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா என்று 7 வீரர்கள் கணக்கு வந்து விடுகிறது. எனவே 2 ஸ்பின்னர்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்களே சாத்தியம். இதில் அணித் தேர்வை கோலி, சாஸ்திரி மிக துல்லியமாக முடிவெடுக்க வேண்டும்.

ஆட்டக்கள நிலவரம்:

பிட்சில் நல்ல பசும்புல் இருப்பது கண்டு வங்கதேச பயிற்சியாளர் ஹதுரசிங்கே ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். ஆனால் மொமினுல் ஹக் கூறும் போது பாதுல்லா பிட்ச் மந்தமாகவே இருக்கும் என்றார். நல்ல வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சிலநாட்களில் மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை இந்தியா-வங்கதேச அணிகள் 7 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 6-இல் வென்றுள்ளது, 1 போட்டி டிரா ஆகியுள்ளது.

கோலியின் தலைமையின் கீழ் இந்தியா டெஸ்ட் போட்டியில் புதிய அத்தியாயம் திறக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வங்கதேச அணி இப்போது நல்ல மேம்பாடடைந்த அணியாகும், மேலும் உள்ளூரில் ரசிகர்கள் ஆதரவு அவர்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.

எந்த நிலையிலும் சோர்வடையாமல் இந்திய அணி உத்திகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x