Published : 12 May 2015 09:02 PM
Last Updated : 12 May 2015 09:02 PM

மெக்கல்லம் விக்கெட்டை மெய்டன் ஓவருடன் வீழ்த்திய ஜாகீர் கான்

ராய்ப்பூரில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிரெண்டன் மெக்கல்லம்மை ஜாகீர் கான் அற்புதமாக நெருக்கி வீழ்த்தினார்.

3 ஓவர்கள இதுவரை வீசிய ஜாகீர் கான் 6 ரன்களை மட்டுமே கொடுத்து மெக்கல்லம் விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்த ஓவர் மெய்டன் ஓவர்.

21 பந்துகளை சந்தித்த மெக்கல்லம், வழக்கத்துக்கு மாறாக ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்து 11 ரன்களில் ஜாகீர் கான் வீசிய 3-வது ஓவரின் கடைசி பந்தில் மிட் ஆஃப் திசையில் டெல்லி கேப்டன் டுமினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு முன்பு வீசிய 5 பந்துகளிலும் மெக்கல்லத்தினால் ரன் எடுக்க முடியவில்லை.

எனவே ஜாகீர் கான் விக்கெட்-மெய்டன் ஓவராக அதனைச் சாதித்தார். மெக்கல்லத்தை சர்வதேச கிரிக்கெட்டில் கூட சமீபத்தில் யாரும் இப்படிக் கட்டிப் போட்டதில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்ட்ராஸ் அவரை விரைவில் வீழ்த்தினார். ஆனால் அவரை நிற்கவிட்டு கட்டிப் போடுவது என்பது கடினம்

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

2-வது ஓவரை ஜாகீர் கான் வீச மெக்கல்லம் 2 பந்தில் ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு சென்றார். ஜாகீர் கான் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

மீண்டும் 4-வது ஓவரில் ஜாகீர் வர, மேலேறி வந்து அடிக்க முயன்றார் மெக்கல்லம், கான் வெளியே சற்று தள்ளி வீசினார் மெக்கல்லம் மட்டையில் சிக்கவில்லை மீண்டும் ஒரு ரன்னே கிடைத்தது. அதே ஓவரில் ஸ்மித் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த 2 பந்துகளில் ஸ்மித் தடவினார். அந்த ஓவரில் ஜாகீர் கான் 5 ரன்களே கொடுத்தார்.

அதற்கு அடுத்ததாக 6-வது ஓவர் ஜாகீர் கான் பந்து வீச, மெக்கல்லம் மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். சரி. இந்த ஓவரில் நிச்சயம் ஜாகீரை பதம் பார்ப்பார் என்றே கருதப்பட்டது. ஆனால்..நல்ல அளவில் வீச முதல் பந்தை தடுத்தே ஆடினார் மெக்கல்லம், அடுத்த பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் செய்ய முயன்றார் முடியவில்லை. அடுத்த பந்து கொஞ்சம் அடிக்கும் இடம் கிடைத்தது ஆனால் பந்து ஆஃப் திசையில் அருகிலேயே பீல்டர் கையில் சென்றது ரன் இல்லை.

5-வது பந்தும் பாயிண்டில் கைக்கு நேராகச் சென்றது. பந்து மெக்கல்லமிற்கு வாகாக வீசப்படவில்லை. 6-வது பந்தில் கிரீஸிற்குள் நகர்ந்து ஜாகீரின் ரிதம்-ஐ கெடுக்க நினைத்தார் மெக்கல்லம் ஆனால் ஜாகீர் லைனை மாற்றவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஃபுல் லெந்தில் வீச மெக்கல்லம் நேராக மிட் ஆஃபில் டுமினி கையில் கேட்ச் கொடுத்தார்.

மொத்தம் 10 பந்துகள் ஜாகீர் கானைச் சந்தித்த மெக்கல்லம் 3 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு அரிய விக்கெட் மெய்டன் ஓவராக அது அமைந்தது. அதுவும் மெக்கல்லத்திற்கு எதிராக!!

சென்னை அணி மெக்கல்லம், ஸ்மித், ரெய்னா விக்கெட்டுகளை இழந்து 11 ஓவர்களில் 53/3 என்று தடுமாறி வருகிறது. டு பிளெஸ்ஸிஸ் 12 ரன்களுடனும், தோனி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x