Published : 06 Mar 2015 09:02 PM
Last Updated : 06 Mar 2015 09:02 PM

மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியா பெற்றது எச்சரிக்கை வெற்றி

பெர்த்தில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி பெற்றது ஓர் எச்சரிக்கை வெற்றியே!

| தோனி பொறுப்பான ஆட்டம்: மே.இ.தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா - வர்ணனை ரிப்போர்ட் - >#உகோ15: இந்தியா - மேற்கிந்திய தீவுகள் போட்டிப் பதிவுகள் |

பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். அவர்களுக்கு இருக்கும் ஒரே மனத்தடை கிறிஸ் கெயில் என்ற ஓர் அதிரடி வீரர் மட்டுமே.

முதலில் ஒன்றைக் கூறுவது உத்தமம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்துக்குப் பிறகு பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டி இந்திய-மே.இ.தீவுகள் போட்டி. இப்படிப்பட்ட பிட்ச்கள்தான் தேவை. அதாவது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வைப்பதன் மூலமே கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்.

ஆனால், இன்று இந்திய அணிக்கு ஒரு நல்ல சவாலான பந்துவீச்சையும், பதற்றத்தையும் நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த ஆட்டத்திலும் ஒரேயொரு அரைசதம் அதுவும் மே.இ.,தீவுகள் பவுலர் ஜேசன் ஹோல்டர் அடித்தது. இந்திய அணியில் ஒருவரும் அரைசதம் எட்டவில்லை. தோனியே அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார்.

பெர்த் பிட்ச் முன்பு போல் இல்லாவிட்டாலும் உலகில் உள்ள மற்ற பிட்ச்களை விட, இங்கு எப்போதும் பவுன்ஸ் அதிகமாகவே இருக்கும். பிரிஸ்பனும் அப்படிப்பட்ட ஆட்டக்களமே.

டாஸில் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. இதுவும் ஒரு நல்ல முடிவே. அந்த அணி கெயில், சாமுயெல்ஸை நம்பியே இருந்தது. நடுவில் சிம்மன்ஸ், கடைசியில் டேரன் சமி, ஆந்த்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி வீரர்கள். அந்த அணியின் பலம் இதுதான். பலவீனங்கள் ஏகப்பட்டது உண்டு, அதுவும் இன்று வெளிப்பட்டது.

கிறிஸ் கெய்ல் நினைத்தபடி இந்திய பந்து வீச்சு இல்லை. அவருக்கு ஷாட்கள் சரியாக சிக்காமலேயே இருந்தது. டிவைன் ஸ்மித் மோசமான பார்ம் தொடர்ந்து அவர் ஷமி பந்தில் 6 ரன்களில் வெளியேறினார்.

சாமுயெல்ஸ் களமிறங்கியும் ஒன்றும் சுலபமாகிவிடவில்லை. உமேஷ் யாதவ், ஷமி, நல்ல வேகம் மற்றும் திசை மற்றும் அளவுகளில் துல்லியமாக வீசி ஸ்விங் செய்தனர், அவ்வப்போது பவுன்சர்களையும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசி சோதனை கொடுத்தனர்.

கெயில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி வந்து பார்த்தார் ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் ஷமியின் ஃபுல் லெந்த் பந்தை டிரைவ் ஆட பந்து தேர்ட்மேனில் காற்றில் சென்றது வேகமாகச் சென்றது உமேஷ் யாதவ் டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் பிடிக்க முடியவில்லை. முதல் வாய்ப்பு நழுவியது. ஆனால் கெயில் இதில் கொஞ்சம் ஆடிப்போனார்.

இந்நிலையில்தான் அவர் யாதவ்வின் அபார ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட அது மிட் ஆனுக்கும் முன்னால் விழ மோஹித் ஓடி வந்து முயன்றார் முடியவில்லை. தான் அவுட் ஆகிவிடுவோம் என்ற பதட்டத்தில் சிங்கிள் என்ற ஒன்று இருப்பதாகவே கெயில் நினைக்கவில்லை. சாமுயெல்ஸ் அவரைக் காப்பாற்றவே சிங்கிள் ஓடினார். அதாவது கெயிலை எப்படியாவது ரன்னர் முனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஓடினார். ஆனால் கெயில் கவனிக்கவேயில்லை. திடீரென அவர் இந்தப் பக்கம் பார்க்க சாமுயெல்ஸ் தன் பக்கத்தில் இருப்பது கண்டு அதிர்ந்தார். ரன் அவுட்.

இதில் கோபமற்ற அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை ஆத்திரத்தில் அடித்தார். ஆனால் அதே போன்ற முயற்சியை எதிர்பார்த்த தோனி சரியாக மிட்விக்கெட்டில் டீப்பில் பீல்டரை நிறுத்த பொறியில் சிக்கினார் கெயில்.

இந்தக் குழப்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் பந்துவீச்சும் மேலும் உத்வேகம் பெற்றது. நல்ல பவுன்ஸ் இருந்தது. பிட்ச் கொஞ்ச சீரற்ற தன்மையுடன் இருந்தது.

கடைசியில் 85/7 என்று மிகவும் மோசமாக போய்விடும் ஆபத்தான நிலையில் இந்திய அணி கோட்டை விட்ட கேட்ச்களினால் ஹோல்டர், டேரன் சமி முதலில் 39 ரன்கள் கூட்டணி அமைக்க, பிறகு ஹோல்டர், டெய்லர் (11) கூட்டணி 51 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ஹோல்டர் தொடர்ச்சியாக தனது 2-வது அரைசதத்தை எட்டினார். ஆனால் அவர் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால் ஸ்கோரை 200 ரன்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். அவர் கடைசியில் தூக்கிக் கையில் கொடுத்து வெளியேறினார் மேற்கிந்திய தீவுகள் 182 ரன்களுக்கு 45-வது ஓவரில் வீழ்ந்தது.

இந்திய அணி சுமார் 5 கேட்ச்களை விட்டது. இதில் கடைசியில் ஜடேஜா, ரோஹித் சர்மா விட்ட கேட்ச்கள் மிகக்கொடுமையானது. மிக எளிதான கேட்ச்கள் அவை. நல்ல பீல்டிங் அணி என்று இதுவரை கூறிக்கொண்டிருந்தோம், ஆனால் இன்று நெருக்கடியில் பீல்டிங் மீண்டும் சோதனைக்குள்ளானது.

183 சென்டிமென்ட்:

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள், 1983 உலகக்கோப்பையில் இந்தியா எடுத்த ரன் எண்னிக்கை 183. தோனியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர்183 நாட் அவுட். கங்குலியினுடையதும் 183. இப்படியாக 183 பற்றி நிறைய பேச்சு எழுந்தது. இதைத் தவிர பெர்த் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா, மே.இ.தீவுகளைச் சந்தித்த போது 126 ரன்கள் என்று இரு அணிகளும் போட்டியை சமன் செய்துள்ளது. இது நடந்தது 1991-92 முத்தரப்பு தொடரில்.

ஆகவே ஆட்டம் டை ஆகும் என்றும் சிலர் கருதினர். மேலும் 1983 உ.கோ. இறுதியில் விவ் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இன்று விராட் கோலி வேறு அதே 33 ரன்களில் அவுட். இருவரும் 3ஆம் நிலை பேட்ஸ்மென்கள். எனவே மே.இ.தீவுகள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சென்டிமென்ட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

இந்திய பேட்டிங் பலவீனத்தை வெளிப்படுத்திய மே.இ.தீவுகள் பந்துவீச்சு:

பவுன்ஸ் பிட்ச்களில் இந்திய அணிக்கு ஷாட் பிட்ச் பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் திணறுவார்கள் என்ற நிலையை என்று இந்திய அணி மாற்றும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தவன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அபாரமான பந்து விழுந்தது. ஆனாலும் கடைசியில் கூடுதல் பவுன்ஸ்தான் வேலையைக் காட்டியது குறிப்பாக தவனுக்கு. ரோஹித் சர்மாவுக்கும் நல்ல பந்துதான் ஆனால் அதே ஷாட் இந்திய பிட்சாக இருந்தால் கவரில் பவுண்டரி, பெர்த் என்பதால்தான் பின்னால் சென்றது.

கோலி அருமையாக ஆடினார். அவர் ஒரு புறம் அனாயசமாக பவுண்டரிகளை அடித்து வந்தார். ஒரு சமயம் ஆஃப் சைடு வீசிய பந்தைக்கூட லெக் திசை இடைவெளியில் பவுண்டரி அடித்தார். கவர் டிரைவ் அவரது பலம். இப்படியாக அவர் 33 ரன்களை எடுத்து பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த நேரம், ரசல் வீசிய பவுன்சரை ஹூக் செய்து லாங் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.

இங்கு ஒன்றைப் புரிந்து கொள்வது நலம். பெர்த் மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகள் நீளம் அதிகம். சரியாக புல்,ஹுக் ஆட முடியாவிட்டால் கேட்ச் போவது இயல்பு. ஆனால் லாங் பவுண்டரியையே தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக விராட் கோலி, பிறகு ஜடேஜா.

ரஹானே நாட் அவுட்?

ரஹானேவுக்கு நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் இருந்தது. அவர் அப்போதுதான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் என்று கொஞ்சம் ஸ்திரமானார். அப்பொது கிமார் ரோச் பந்தை அவர் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து நல்ல வேகம், கொஞ்சம் நல்ல அளவில் விழுந்த பந்து. மட்டையின் வெளிவிளிம்பில் பட்டதாக முறையீடு எழ நடுவர் கையை உயர்த்தினார்.

ஆனால் ரஹானே உடனேயே ரிவியூ செய்தார். அவுட்டாக இருந்தால் ரிவியூ செய்ய மாட்டார். ஏனெனில் பேட்ஸ்மென்களுக்குத் தெரியும் நிச்சயம் 3-வது நடுவர் நமக்கு அவுட் கொடுப்பார் என்று. படாததால்தான் அவர் ரிவியூ செய்தார். நிச்சயமற்ற தனமையே இருந்தது. பந்து பேடில் பட்டதா, பேட், பேடில் பட்டதா, மட்டையின் விளிம்பா என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக்க வேண்டிய 3ஆம் நடுவர் கள நடுவர் தீர்ப்புக்கு செவி சாய்த்தார்.

அதாவது கள நடுவருக்கு சந்தேகமில்லை என்பதை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ எதற்கு? எப்படியிருந்தாலும் நடுவர் தீர்ப்புதான் ஜெயிக்கும் என்றால் ரிவியூ தேவையில்லையே? இது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்புதான். ஆனால், பவுலருக்கு சாதகமாக இருப்பதால் நாம் இதனை உணர்வு ரீதியாக ஆதரிக்கலாம்.

ரெய்னா 22 ரன்களில் வெளியே சென்ற பந்தை விரட்டி அவுட் ஆனார். ஜடேஜா தேவையில்லாமல் நீளமான பவுண்டரியைத் தேர்ந்தெடுத்து ஹுக் ஷாட் ஆடினார். பந்து அவருக்கும் மேலே எழும்பும்போது கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆனாலும் அவர் ஆடிவிட்டார். வீழ்ந்தார்.

தோனி இது போன்ற சூழ்நிலைகளில் உண்மையில் தாதா. எவ்வள்வோ போட்டிகளை, குறிப்பாக சிறிய இலக்கு போட்டிகளை இந்தியா டாப் வீரர்கள் சொதப்பலாக்கும்போதும் தோனி வென்று கொடுத்திருக்கிறார். இன்றும் அதுதான் நடந்தது.

மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் புரியாத கேப்டன்சி:

வேகப்பந்து வீச்சாளர் டெய்லருக்கு 2 ஓவர்கள் மீதமுள்ளன. ஹோல்டருக்கு 3 ஓவர்கள் உள்ளன. ரோச், ரசல் ஆகியோருக்கு தலா 2 ஓவர்கள் மீதமுள்ளன. இந்நிலையில் ஸ்மித், சாமுயெல்ஸ் 8.1 ஓவர்களை வீச வேண்டிய அவசியமென்ன? அந்த 8 ஓவர்களில் 32 ரன்கள் சென்றது. ஒருவேளை... ஒருவேளை முன்னணி பவுலர்களை பயன்படுத்தி, தோனியையோ, அஸ்வினையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் அதிகமாகியிருக்கலாம்.

ஏனோ இதனை அவர் செய்யவில்லை. இது ஒரு புரியாத புதிர்தான், சர்ச்சைக்குரியதும் கூட. கிமார் ரோச்சைக் கொண்டு வந்து ஒரு மோது மோதிப்பார்த்திருக்க வேண்டும், அவரிடம் அந்த இயல்பூக்கம் இல்லை. இது நிச்சயம் ஏமாற்றமளிக்கக் கூடிய விஷயமே.

எது எப்படியிருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியை மே.இ.தீவுகள் இன்று ஒலித்துள்ளது. இந்திய அணி எப்போதும் நேர்மறையான பாசிடிவ் அம்சங்களையே ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பார்க்கும், இன்று முரணாக வெற்றியில் எதிர்மறைக் கூறுகளைக் கண்டு அதனை களைய வேண்டிய நிர்பந்தத்தை மே.இ.தீவுகள் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியை நாக்-அவுட்டில் வெளியேற்ற நிச்சயம் வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களையே இனி அமைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே காலிறுதிக்கு முன்பாக இந்தியாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அதில் மனத்தளர்வு ஏற்படுமாறு ஆடிவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x