Published : 21 Feb 2015 10:51 AM
Last Updated : 21 Feb 2015 10:51 AM

கருப்புப் பண வேட்டை - பொதுவான வாக்குறுதி

கருப்புப் பண மீட்பு என்பதை தேர்தல் உத்திகளுள் ஒன்றாகப் பயன்படுத்தி வெற்றிபெற்ற பெருமை பாஜக கட்சியினரைச் சேரும். சென்ற முறை பாஜக, வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் 100 நாட்களில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்ற ஒரு செய்தியைத் தனது தேர்தல் வாக்குறுதியாகவே பதிவு செய்ததும், உடனே காங்கிரஸ் கட்சியும் பதிலுக்கு 100 நாட்களில் கருப்புப் பணம் மீட்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டதால் மட்டுமே சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறை பாஜக வெற்றி பெற்றது முதல் இது நாள் வரை வெளிநாட்டுப் பணம் தொடர்பாகப் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிவருகிறது.

இதனால்தான் டெல்லி தேர்தலில் பாஜக பின்னடைவு கண்டது. பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதில் கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் உள்ளனர். இனியும் தள்ளிப்போடாமல் கருப்புப் பண விவகாரத்துக்கு பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்வரும் தேர்தல்களில் பாஜக தொலைந்துபோவதற்கான வாய்ப்புகளே அதிகம். விழித்துக்கொள்ளுமா பாஜக?

- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.

நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிடும் பொதுவான வாக்குறுதி, ‘வெளிநாட்டு வங்கிகளிலும் சுவிஸ் வங்கிகளிலும் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்போம்’ என்பதுதான்.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால், இந்தியாவில் வறுமையை ஒழித்துவிடலாம் என்றும், பல ஆண்டுகளுக்கு இந்தியாவின் பட்ஜெட் போடுவதற்குப் போதுமான பணம் என்றும் பல கதைகளைக் கேட்டிருக்கிறோம்.

‘கருப்புப் பணத்தை மீட்போம்’ என்ற கோஷங்கள் எல்லாம் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறவும், வழிக்கு வராத தலைவர்களை மிரட்டி வழிக்குக் கொண்டுவரவும் மட்டுமே உதவுகிறது. ‘கருப்புப் பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற அறிவிப்புகள் எல்லாம், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு செய்து, பணத்தை எடுத்துவிடுங்கள் என்று எச்சரிக்கை அளிப்பதாகவே அமைகிறது.

- அ. சிவராமன்,மேட்டூர் அணை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x