Last Updated : 25 Nov, 2014 12:15 PM

 

Published : 25 Nov 2014 12:15 PM
Last Updated : 25 Nov 2014 12:15 PM

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பிக் 4 ஆதிக்கமும் ஆட மறுத்த இந்தியாவும்

டென்னிஸில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு இணையாக மதிக்கப்படுவது, டேவிஸ் கோப்பை போட்டி. உலகின் தலைசிறந்த அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

1900 முதல், நடுவில் சிலவருடங்கள் தவிர ஆண்டுதோறும் டேவிஸ் கோப்பை போட்டி நடந்துவருகிறது. இதுவரை நடந்த 103 போட்டிகளில், இந்தவருடம் பிரான்ஸை வென்று முதல் தடவையாக ஜெயித்த சுவிட்சர்லாந்தையும் சேர்த்தால், டேவிஸ் கோப்பையை வென்ற அணிகளின் எண்ணிக்கை 14 மட்டுமே.

விசித்திரமான வரலாறு

டேவிஸ் கோப்பையின் வரலாறு கொஞ்சம் விசித்திரமானது. 114 வருடங் களுக்கு முன்பு 1900ல், அமெரிக்காவும், பிரிட்டனும் ஆடுகிற டென்னிஸ் போட்டியாகவே அது தன் பயணத்தைத் தொடங்கியது. அப்போது இந்தப் போட்டியின் பெயர், இண்டர்நேஷனல் லான் டென்னிஸ் சேலஞ்ச். ஆனால், முதல் போட்டியில் பங்கேற்ற வீரரான ட்விட் டேவிஸ், போட்டி எப்படி நடத்தப்படவேண்டும் என்று வடிவமைத்து, கோப்பையைத் தன் செலவில் வாங்கித் தந்ததால் பிறகு போட்டிக்கு அவர் பெயரே வைக்கப்பட்டது.

பின்னர் காலப்போக்கில் டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகமாகின. 1972 வரை டேவிஸ் கோப்பையை வென்ற அணியே, அதற்கடுத்த ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்று வந்தது. அதன்பிறகு, வெற்றி பெற்ற அணியும் அடுத்த வருடத்தில் அனைத்து சுற்றுகளிலும் ஆடவேண்டும் என்கிற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இப்போதுள்ள நடைமுறை 1981 முதல் பின்பற்றப்படுகிறது. வேர்ல்ட் க்ரூப் என்கிற பிரிவில் இறுதிக் கட்டமாக 16 அணிகள் மோதுகின்றன. பிறகு இரு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றன. 1993ல் முதல்முறையாக 100 நாடுகள் டேவிஸ் கோப்பையில் போட்டியிட்டன. 2014-ல் 122 நாடுகள் கலந்துகொண்டன.

1970 வரை பிக் 4 எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகளே மாறி மாறி கோப்பையை கைப்பற்றியுள்ளன. 1974ல் டேவிஸ் கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா புதிய பாதை அமைத்தது. பிறகு ஸ்வீடனும் ஜெர்மனியும் போட்டிபோட்டு டேவிஸ் கோப்பையை வெல்ல ஆரம்பித்தன. 2000ம் முதல் ஸ்பெயின் பலமான அணியாக இருக்கிறது. அமெரிக்கா அதிகபட்சமாக 32 முறை டேவிஸ் போட்டியை வென்றுள்ளது.

இந்தியாவின் லியாண்டர் பயஸ், டேவிஸ் கோப்பையின் பிரபல வீரர். இரட்டையர் ஆட்டங்களில் 41-ல் வெற்றி பெற்று 10-ல் மட்டுமே தோற்றிருக்கிறார். மகேஷ் பூபதி 27-ல் வெற்றி பெற்று 6-ல் மட்டுமே தோற்றிருக்கிறார். டேவிஸ் கோப்பை போட்டியில் பயஸூம் பூபதியும் இணைந்து ஆடிய 27 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே தோற்றிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் அதிக வெற்றி கண்ட இரட்டையர் வீரர்களில் இவர்கள் 3-வது இடத்தில் இருக்கிறார்கள்.

இந்தியா ஆடமறுத்த இறுதிப் போட்டி!

இந்திய அணி 1966, 1974, 1987 என மூன்று முறை டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாலும் ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றமுடியவில்லை. இந்த மூன்றில் வரலாற்றில் இடம்பிடித்தது இந்திய அணி ஆடமறுத்த 1974 போட்டிதான்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகளைத் தவிர்த்து இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் 1974ல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதால், யார் புதிய வரலாறு படைக்கப்போகிறார்கள் என்கிற ஆவல் டென்னிஸ் ரசிகர்களிடையே இருந்தது.

இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ் (20 வயது) - ஆனந்த் அமிர்தராஜ் (22 வயது) சகோதரர்கள் முக்கிய வீரர்களாக இருந்தார்கள். கேப்டனாக மற்றொரு தமிழர், ராமநாதன் கிருஷ்ணன். அமிர்தராஜ் சகோதரர்கள், பலகோடி ரசிகர்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து இந்திய அணியை நம்பமுடியாத வகையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவைத்தார்கள். காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் அரையிறுதியில் சோவியத் யூனியனையும் தோற்கடித்ததால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்கிற நம்பிக்கை பலமாக இருந்தது. இறுதிப் போட்டி, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருந்தது.

நிறவெறி மற்றும் இன ஒதுக்கலுக்குத் தீவிரமாக ஆதரவளித்த தென் ஆப்பிரிக்க அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு 1964 முதல் 1992 வரை ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்கள் உலகில் எந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டாலும் அவர்கள் வேறுவிதமாக நடத்தப்பட்டார்கள். தென் ஆப்பிரிக்க வீரர்களிலேயே பலர் தங்கள் அரசின் நிறவெறிக்கொள்கையை எதிர்த்து அணியிலிருந்து விலகினார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் நிறைய இந்தியர்கள் வசித்ததால் இந்திய அணிக்குப் பக்கபலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் இந்தியர்களுக்கு அதாவது வெள்ளையர் அல்லாதவர்களுக்கு அரங்கின் ஒரு ஓரமாகத்தான் இடமளிக்கப்படும் என்கிற நிலையும் இருந்தது. அது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய வீரர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்கிற சூழல் நிலவியது. உலக நாடுகள் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததால் இந்தியாவும் தன் எதிர்ப்பை உலகளவில் பதிவு செய்யும் தருணமாக டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டி அமைந்தது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின்படி, தென் ஆப்பிரிக்காவுடன் இறுதிப் போட்டியில் ஆடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் விலகலால், தென் ஆப்பிரிக்கா சுலபமாக சாம்பியன் ஆனது

அந்த வருட டேவிஸ் கோப்பையை வென்றாலும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. “டேவிஸ் கோப்பை வரலாற்றில் எங்கள் பெயர் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியே. ஆனால் அதைப் பெற்ற முறை மகிழ்ச்சியளிக்கவில்லை” என்றார் அப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்த பாப் ஹெவிட். பிறகு இந்திய அணி, 1987ல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று 0-5 என்கிற கணக்கில் ஸ்வீடனிடம் தோற்றுப்போனது. அதற்கு முன்பு 1966-ல் 1-4 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

“1974ல் ஆடியிருந்தால் 4-1 என்கிற வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம்” என்கிறார் ஆனந்த் அமிர்தராஜ். 1987-க்குப் பிறகு இந்தியாவுக்கு டேவிஸ் கோப்பையை வெல்ல மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்திய அணியின் விலகலால் கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா, இன்னொருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவேயில்லை.

டேவிஸ் கோப்பை சாம்பியன்கள்:

32 அமெரிக்கா

28 ஆஸ்திரேலியா

9 பிரான்சு, பிரிட்டன்

7 ஸ்வீடன்

5 ஸ்பெயின்

3 செக் குடியரசு*, ஜெர்மனி

2 ரஷ்யா

1 குரோஷியா, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, செர்பியா, சுவிட்சர்லாந்து

* 1980ல் செக்கோஸ்லோவாகியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x