Last Updated : 06 Jul, 2019 12:53 PM

 

Published : 06 Jul 2019 12:53 PM
Last Updated : 06 Jul 2019 12:53 PM

பாக். வீரர் ஷோயப் மாலிக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: சானியா மிர்சா உருக்கம்

உலகக்கோப்பைப் போட்டியில் இருந்து வெற்றியுடன் வெளியேறிய தருணத்தோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை மூத்த வீரர் ஷோயிப் மாலிக் அறிவித்தார்.

உலகக் கோப்பைப் போட்டி முடிந்தவுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தநிலையில் நேற்று வங்கதேசத்துக்குஎதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றவுடன் அந்த தகவலை ஷோயிப் மாலிக் உறுதி செய்தார்.

போட்டி முடிந்தபின் அனைத்து வீரர்களும் ஷோயிப் மாலிக்கை கைதட்டி ஆரவாரம் செய்து, அணிக்காக அவரின் பங்களிப்புக்கு மரியாதை செய்தனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஷோயிப் மாலிக் ஓய்வு அறிவித்தாலும், இன்னும் டி20 போட்டியில் இருந்து அவர் ஓய்வை அறிவிக்கவில்லை.

287 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷோயப் மாலிக் 7ஆயிரத்து 534 ரன்கள் சேரத்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும். சக்லைன் முஷ்டாக்கை போல் ஆப்-ஸ்பின்னராக வலம் வந்த ஷோயிப் மாலிக் 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 41 ஒருநாள் போட்டிகளுக்கு பாகிஸ்தான்அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து ஷோயிப் மாலிக் கூறியதாவது

 " நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஏனென்றால் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அதிகமாக நேசித்தேன். ஓய்வுக்குப்பின் என்னுடைய ஓய்வு காலத்தை குடும்பத்தினருடன் செலவிடுவேன். அடுத்ததாக எனது கவனம் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இருக்கும்" அணியில் மூத்த வீரராக அணிக்கு உதவ எண்ணினேன்.

நேரமும், சூழலும் சரியான வழியில் செல்லவில்லை. நான் என்னுடைய கடைசி தருணத்தில் அணிக்காக ரன் குவிக்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. ஒரு வீரரை இரண்டு அல்லது 3 போட்டிகளில் விளையாடுவதைக் கொண்டு முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

 எனக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட வீரர் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பாகிஸ்தான் அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடுவேன் என நினைத்துக் கூட  பார்க்கவில்லை. கடினமாக உழைத்தால், நேர்மையாக விளையாடினால் நல்ல நிலையை அடையலாம். என்னுடைய ஒருநாள் போட்டி வாழ்க்கையும், சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது "

இவ்வாறு ஷோயிப் மாலிக்  தெரிவித்தார்.

ஷோயிப் மாலிக் ஓய்வு குறித்து அவரின் மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளதில், " ஒவ்வொரு கதைக்கும் முடிவு உண்டு. ஆனால் வாழ்க்கையில், ஒவ்வொரு முடிவிலும் புதிய தொடக்கம் இருக்கும். ஷோயிப் மாலிக், 20 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடியது பெருமையாக இருக்கிறது. இன்னும் தொடர்ந்து பெருமதிப்புடன், பணிவுடன் விளையாடப் போகிறீர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நானும், நமது மகள் இஸ்ஹானும் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்த சாதித்ததை நினைத்து பெருமைப்படுகிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x