Published : 31 Aug 2017 03:51 PM
Last Updated : 31 Aug 2017 03:51 PM

3 ரன்களுக்கு 5 விக்கெட்: பாக்.வீரர் சோஹைல் தன்வீர் டி20 புதிய சாதனை

கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ஆடி வரும் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சு சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் மிக மிகச் சிக்கனமாக வீசியதே இவரது சாதனை!

பொலார்ட் தலைமை பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணிக்கு எதிராக கடுமையாகப் பந்து வீசி 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார், இதனால் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி 13.4 ஓவர்களில் 59 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த அமேசான் அணி 158 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய பாரபடாஸ் டிரைடண்ட்ஸ் அணி சோஹைல் தன்வீரின் தீப்பொறி பறந்த முதல் ஸ்பெல்லில் அவரிடம் 2 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பவர் பிளே முடிவில் பாரபடாஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வந்தது.

தொடக்கத்தில் 4 விக்கெட்டுகளைக் கைபற்றிய தன்வீர் பிறகு 5-வது விக்கெட்டையும் கைப்பற்றி 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சுக்கான சாதனை நிகழ்த்தினார். இதே அணியில் ஆடிய ஆப்கான் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கரீபியம் பிரிமியர் லீல் டி20-யில் பார்படாஸ் அணி ஆகக்குறைந்த 2வது ரன் எண்ணிக்கைக்கு ஆல் அவுட் ஆனது. சோஹைல் தன்வீரின் இந்த பேய் பந்து வீச்சை அடுத்து ஏற்பட்ட படுதோல்வியினால் பிளே ஆப் சுற்றுக்கு பார்படாஸ் அணி தகுதி பெறுவது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

பவர் பிளேயில் தன்வீரை சுத்தமாக விளையாட முடியவில்லை. அவர் கொடுத்த 3 ரன்களில் 2 ரன்கள் எட்ஜில் வந்ததே.

அதுவும் இவர் வீசியது சாதாரண பேட்ஸ்மெனுக்கு அல்ல முதல் ஓவரை அவர் கேன் வில்லியம்சுக்கு வீசினார், ஓவர் த விக்கெட்டில் வீசி பந்தை கடுமையாக ஸ்விங் செய்ய 4 பந்துகள் வில்லியம்ன்சன் ஒன்றுமே செய்ய முடியாமல் பீட் ஆனார். கடைசியில் ஸ்லாஷில் தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வில்லியம்சன்.

சோஹைல் தன்வீர் எடுத்த 5 விக்கெட்டுகள் ஏப்பசோப்பையான விக்கெட்டுகள் அல்ல, டிவைன் ஸ்மித்(2), கேன் வில்லியம்சன் (0), இயான் மோர்கன் (0), கெய்ரன் பொலார்ட் (0) வஹாப் ரியாஸ் (0). ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x